Coimbatore Mayor Election : இன்று நடைபெறும் கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் - போட்டியின்றி தேர்வாகிறாரா ரங்கநாயகி?
முதல் முறையாக மாநகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட ரங்கநாயகிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது, திமுகவில் உள்ள சீனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் திமுகவின் முதல் மேயர் ஆகிய சிறப்புகளுடன் பதவியேற்ற கல்பனா ஆனந்தகுமார் இரண்டே ஆண்டுகளில் தனது பதவியை ராஜினாமா செய்தார். கல்பனா பதவியேற்ற போது எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர், பேருந்தில் சென்னை சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தவர் ஆகிய நேர்மறையான அவரது பிம்பங்கள், மேயராக பதவியேற்ற பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்தது. மேயராக பொறுப்பேற்றவுடன் திமுக கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் செயல்பட்டது, மாநகராட்சி மண்டல தலைவர்களுடன் இணக்கமாக இல்லாமல் மோதல் போக்குடன் செயல்பட்டது, நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் முறையாக வேலை பார்க்காமல் இருந்தது உள்ளிட்ட தொடர் புகார்கள் எழுந்தன. கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் பண வசூல் செய்தது, ஒப்பந்ததாரர்களிடம் கமிசன் கேட்டது, பக்கத்து வீட்டை பெண்ணை காலி செய்ய தொல்லை கொடுத்தது என அடுத்தடுத்து சர்ச்சைகளிலும் சிக்கினார். இதன் காரணமாக அவரை ராஜினாமா செய்ய கட்சி தலைமை அறிவுறுத்தியது. இதனையடுத்து உடல் நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
வேட்பாளராக தேர்வான ரங்கநாயகி
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 6 ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கணபதி பகுதியை சேர்ந்த 29 வது வார்டு கவுன்சிலராக உள்ள ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். கோவை மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவராக உள்ள மீனா லோகு தனக்கு வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில் கண்ணீரோடு வெளியேறினார்.
கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 96 வார்டுகளில் திமுக கூட்டணி கட்சியினர் கவுன்சிலர்களாக இருக்கின்றனர். ஒரு வார்டில் எஸ்டிபிஐ கட்சி கவுன்சிலரும், மூன்று வார்டுகளில் அதிமுக கவுன்சிலர்களும் இருக்கின்றனர். திமுக கூட்டணி பலம் வாய்ந்த அணியாக இருக்கும் நிலையில், திமுக வேட்பாளரான ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் நாளை வேறு யாராவது வேட்பு மனு தாக்கல் செய்தால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாநகராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் தேர்தலுக்கான வாக்குபெட்டி, வாக்கு பதிவு செய்யும் இடம், வாக்கு எண்ணிக்கைக்கான டிரே உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
போட்டியின்றி மேயர் தேர்வு நடக்குமா?
முதல் முறையாக மாநகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட ரங்கநாயகிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது, திமுகவில் உள்ள சீனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை எட்டு மணிக்கு 73 திமுக கவுன்சிலர்களும் டவுன்ஹால் பகுதியில் ஒரு மண்டபத்தில் இருக்க வேண்டும் என திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துச்சாமி ஆகியோர் முகாமிட்டு மீண்டும் திமுக கவுன்சிலர்களிடம் காலை அறிவுரை வழங்க இருக்கின்றனர். நெல்லை மாநகராட்சி தேர்தலில் திமுக தலைமை அறிவித்த மேயர் வேட்பாளருக்கு போட்டியாக, வேட்பாளர் களமிறங்கி குறிப்பிடதக்க வாக்குகளை பெற்ற நிலையில், அதுபோன்ற நிகழ்வு கோவையில் நடந்து விடக்கூடாது என கூடாது என்பதற்காக இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.