’பட்ஜெட்டில் சிறு, குறு தொழில்களை மேம்படுத்த கவனம் செலுத்தப்படவில்லை’ - கோவை தொழில் துறையினர் கருத்து
மத்திய நிதியமைச்சர் 2023-2024ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். இந்தாண்டின் பட்ஜெட் உரையை ஒரு மணி நேரம் 25 நிமிடங்களில் வாசித்து முடித்தார்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கிய நிலையில் இன்று மத்திய நிதியமைச்சர் 2023-2024ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். இந்தாண்டின் பட்ஜெட் உரையை ஒரு மணி நேரம் 25 நிமிடங்களில் வாசித்து முடித்தார் நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன். கடந்த ஆண்டை விட இம்முறை குறைவான நேரத்தில் மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி உச்சரம்பில் மாற்றம், பென்களுக்கான புதிய சேமிப்பு திட்டம், போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூபாய் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, நாடு முழுவதும் 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கியதாக இருந்தது.
இந்த பட்ஜெட் குறித்து வரவேற்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட தொழில் அமைப்பினர் மத்திய பட்ஜெட் இந்திய நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் பட்ஜெட் என கருத்து தெரிவித்துள்ளனர். பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய தொழில் வர்த்தக சபையினர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இந்த ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தேர்தலுக்கான அறிக்கையாக பார்ப்பதாக தெரிவித்தனர்.
விவசாயம் மற்றும் சிறுதானிய உற்பத்திக்கான அறிவிப்புகள் வரவேற்கதக்கதாகவும், கொரோனா காலத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் ஒப்பந்த பணிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது என்றனர். அரசு உத்தரவாத கடன்களுக்கு என 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, தனிநபருக்கான வரி சலுகை என்பதை குறைத்துள்ளது, டிஜிட்டல் ஆவணங்கள் போன்றவை வரவேற்கத்தக்கது என்றனர். இயற்கை உரம் தயாரிப்பு மற்றும் ஊக்குவிக்க நடவடிக்கை, ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற உதவி அளிக்கபடுமென்ற அறிவிப்பு, மாங்குரோவ் காடுகள் வளர்க்க நடவடிக்கை, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல தொழில் துவங்க பல்வேரு அமைப்புகள் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை, மாநில தலைநகரங்களில் உற்பத்தி செய்யபட்ட பொருட்கள் சிறுதானிய பொருட்களை விற்பனை செய்ய மால் அமைக்க நடவடிக்கை போன்றவை வரவேற்கத்தக்கது என்றனர்.
மேலும் செயற்கை நுண்ணறிவு, ரோபொ தொழில்நுட்பங்களுக்கு முன்று மையம் அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர் அதில் ஒரு மையத்தை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும், கடந்த பட்ஜெட்டில் கூறபட்ட அம்சங்கள் நடைமுறை நடவடிக்கைகள் குறித்த புள்ளியல் தகவல்கள் இல்லை என்றவர்கள் மக்கள் செய்யும் செலவிற்கேற்ப நாட்டின் வளர்ச்சி பெறும் என்ற அடிப்படையில் இந்த பட்ஜெட் உள்ளதாக தெரிவித்தவர்கள் மூலப்பொருள்கள் விலையேற்றம் குறித்த அறிவிப்பேதும் இல்லை என்பது ஏமாற்றமே என்றனர்.
இதேபோல பட்ஜெட் தொடர்பாக பேசிய டேக்ட் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ், “பட்ஜெட்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தூண்களாக இருந்து குறு, சிறு தொழில்களுக்கான அறிவிப்பில் எதிர்பார்ப்புகள் ஒன்றும் பெரிய அளவில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. தனிமனித வருமான வரியை உயர்த்தியது வரவேற்கத்தக்கது. குறு, சிறு தொழில்களுக்கான கடன் வழங்குவதில் வட்டி சதம் குறைப்பு அறிவிக்கப்படவில்லை. ஜிஎஸ்டியில் குறு, சிறு தொழில்களுக்கு உள்ள பிரச்சனைகளை தீர்க்கப்படும் என்ற அறிவிப்பு இல்லை. சிறு, குறு தொழில்களுக்கு தனி அமைச்சகம், தனி கடன் திட்டம் உள்ளிட்டவை இல்லை. சிறு, குறு தொழில்களை மேம்படுத்த எவ்விதத்திலும் தனி கவனம் செலுத்தப்படவில்லை” எனத் தெரிவித்தார்.