Coimbatore Car Blast: கோவை கார் வெடிப்பு - 6வது நபரை இரவோடு இரவாக தட்டித் தூக்கிய காவல்துறை..!
கோவை உக்கடத்தில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த வழக்கில் 6வது நபராக அஃப்சர்கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை உக்கடத்தில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த வழக்கில் 6வது நபராக அஃப்சர்கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார் வெடித்தபோது உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினரான அஃப்சர்கானை இரவோடு இரவாக தனிப்படை காவல்துறை கைது செய்தனர். ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு காவல்துறை காவலில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் 6 வது நபரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கோவை மாநகரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கோவை கார் வெடிப்பு கைதான முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காவல் துறையினர் மனு தாக்கல் செய்தனர். 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ராஜசேகர் உத்தரவிட்டார். கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், அதில் அவர்களது பங்கு உள்ளதா என்பது குறித்தும் 5 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக 6வது நபராக அஃப்சர்கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.