Driver Sharmila Car: கமல்ஹாசன் பரிசளித்த காரை டெலிவரி எடுத்த ஷர்மிளா ; ஐ.டி. நிறுவனத்திற்கு கார் ஓட்டபோவதாக தகவல்
வாடகை கார் வாங்குவதற்காக மக்கள் நீதி மய்யம் பண உதவி செய்யும் எனத் தெரிவித்து, அதற்கான முதல் கட்ட காசோலையை ஷர்மிளாவிடம் கமல்ஹாசன் வழங்கினார்.
கோவை வடவள்ளி பகுதியை சார்ந்தவர் ஷர்மிளா. 23 வயதான இவர், கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரைப் பற்றிய செய்திகள் சமூக தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், அனைத்து தரப்பினரும் ஷர்மிளாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். அதன்படி பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஷர்மிளாவின் பேருந்தில் பயணம் செய்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் செய்து ஷர்மிளாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். கனிமொழி பயணம் செய்த ஒரு மணி நேரத்தில் தன்னைப் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணன் என்பவர், வேலையை விட்டு நீக்கியதாக ஷர்மிளா தெரிவித்தார். ஷர்மிளாவே வேலையை ராஜினாமா செய்ததாக பேருந்து உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் பணியை விட்டு கால் டாக்ஸி ஓட்டப்போவதாக ஷர்மிளா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சென்னையில் ஷர்மிளா சந்தித்து உரையாடினார். அப்போது வாடகை கார் வாங்குவதற்காக மக்கள் நீதி மய்யம் பண உதவி செய்யும் எனத் தெரிவித்து, அதற்கான முதல் கட்ட காசோலையை ஷர்மிளாவிடம் கமல்ஹாசன் வழங்கினார். மேலும் புதிய கார் புக் செய்தவுடன் மீதித்தொகை வழங்கப்படும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கோவை அவினாசி சாலையில் உள்ள பிரபல கார் சோரூமில் ஷர்மிளா பெயரில் 16 இலட்சம் ரூபாய் மதிப்பலான மகேந்திரா மரோசா கார் புக் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்னர் புதிய காரருக்கான சாவியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஷர்மிளாவிடம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கோவை அவிநாசி சாலையில் உள்ள கார் ஷோரூமில் சனிக்கிழமை ஷர்மிளா தனது புது காரை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உடன் சென்று டெலிவரி எடுத்துள்ளார். இது தொடர்பான போட்டோ, வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து சர்மிளாவின் தந்தை மகேஷ் கூறுகையில், ”நல்ல நாள் என்பதால் சனிக்கிழமை புதிய காரை டெலிவரி எடுத்துள்ளோம். அதன் பின்னர் ஆர்.டி.ஒ நடைமுறைக்கு பின்னர் இரு தினங்களில் கார் வந்துவிடும். புதிய காரினை ஐ.டி நிறுவனத்திற்கு ஷர்மிளா ஓட்ட உள்ளார்” எனத் தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்