Chess Olympiad Torch: கோவை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி-பிரதமர் பெயர் இல்லாததால் நிகழ்ச்சியை புறக்கணித்த பாஜக
செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்க உள்ள நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஒலிம்பிக் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டது.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்க உள்ள நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஒலிம்பிக் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டது. இதையடுத்து கோவை பந்தய சாலையில் இருந்து மக்கள் பார்வையுடன் கொடிசியாவிற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கோவை கொடிசியா வளாகத்தில் மேளதாளங்கள் முழங்க செஸ் ஒலிம்பியாட் ஜோதி வரவேற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு துறைகளில் சாதனைகள் புரிந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ராமசந்திரன், முத்துசாமி, மு.பெ. சாமிநாதன் ஆகியோர் கௌரவித்தனர்.
இதற்கு முன்னர் இந்த நிகழ்ச்சியில் தலைமை உரை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என முதலமைச்சர் 24 மணி நேரம் உழைத்து வருகிறார். இந்த சர்வதேச செஸ் விளையாட்டு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 187 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் பேசும் போது, “குறுகிய காலத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக முதலமைச்சர் செய்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் செஸ் விளையாட்டுப் போட்டியை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இன்று செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடக்க விழா நடைபெற்று வருகிறது” என்றார்.
இதனை அடுத்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசும் போது, “வரும் 28 ம் தேதி நடைபெறும் செஸ் போட்டிக்கான ஜோதி மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் வகையிலும் செஸ் போட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த செஸ் போட்டியில் கலந்து கொள்கின்றனர். நமது தேசியமும் நமது மாநிலமும் செஸ் போட்டியில் சளைத்தவர்கள் இல்லை என்பதை இது காட்டுகிறது. தமிழக முதல்வர் ஒவ்வொரு நிமிடமும் இந்த போட்டியை கவனித்து வருகிறார். ஒட்டுமொத்த தமிழக அரசு நிர்வாகமும் இதில் கவனம் வைத்துள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி கிராமத்தின் பட்டி தொட்டி எங்கும் தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி பேசும் போது, “மாமல்லபுரத்தில் செஸ் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. செஸ் விளையாட்டு போட்டியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வும் ஆர்வமும் வரவேண்டும் என்ற நோக்கில் இந்த போட்டியை நடத்த முதல்வர் முன்னெடுத்து வருகிறார். 187 நாடுகளில் உள்ள 2000 வீரர்கள் இந்த செஸ் போட்டியில் கலந்து உள்ளனர். உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் இந்த விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. அனைத்து விளையாட்டு துறைகளிலும் நம் மாநிலம் நம் நாடு முன் வரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த நிகழ்வில் பரதம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், தற்காப்பு கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட்டன. மேலும் அதிவிரைவு சதுரங்க போட்டியும் நடத்தப்பட்டது. பின்னர் செஸ் கேக் வெட்டப்பட்டது. அதனை தொடர்ந்து 16 மாவட்ட பிரதிநிதிகளிடம் மாதிரி ஜோதிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவாக கோவைக்கு கொண்டு வரப்பட்ட ஒலிம்பியாட் ஜோதி கிராண்ட் மாஸ்டர் சிறப்பு விருந்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே செஸ் ஒலிம்பியாட் ஜோதி நிகழ்ச்சியில் பாஜகவினர் கலந்து கொண்ட நிலையில் பிரதமர் பெயரை பயன்படுத்தாததால் நிகழ்ச்சியிலிருந்து திடீரென வெளியேறினர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் குறித்தும், இந்தப் போட்டி நடைபெற முதல்வரின் முயற்சிகள் குறித்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் பேசினர். ஆனால் பிரதமர் குறித்து பேசவில்லை எனவும் பிரதமரின் பெயரை நிகழ்ச்சியில் பயன்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டி, பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் முன்வரிசையில் 10க்கும் மேற்பட்டோர் வெளிநடப்பு செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்