கோவையில் கார் மோதி மருத்துவர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் ; பிரபல மருத்துவர் ராமசந்திரனை கைது செய்த சிபிசிஐடி
நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் மோதியதில் டாக்டர் உமாசங்கர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இவ்வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் இருந்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
![கோவையில் கார் மோதி மருத்துவர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் ; பிரபல மருத்துவர் ராமசந்திரனை கைது செய்த சிபிசிஐடி Cbcid police have arrested Dr. Ramachandran in connection with the death of a doctor in a car accident in Coimbatore கோவையில் கார் மோதி மருத்துவர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் ; பிரபல மருத்துவர் ராமசந்திரனை கைது செய்த சிபிசிஐடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/13/f36b9e12ad92552549525bb07c5314f3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை காந்திபுரம் பகுதியில் எல்லன் என்ற மருத்துவமனை 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையை பிரபல மருத்துவரான ராமச்சந்திரன் (72) நிர்வகித்து வந்தார். இந்நிலையில் எல்லன் மருத்துவமனையை சென்னையைச் சேர்ந்த உமாசங்கர் (54) என்ற மருத்துவருக்கு ஓப்பந்த அடிப்படையில் வாடகைக்கு ராமசந்திரன் கொடுத்தார். இதையடுத்து எல்லன் மருத்துவமனையை சென்னை மருத்துவமனை என பெயர் மாற்றி டாக்டர் உமாசங்கர் நடத்தி வந்தார். ஏற்கனவே சென்னையில் சென்னை மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்ததால், அதன் கிளையாக கோவையில் இந்த மருத்துவமனை செயல்பட்டது.
![டாக்டர் உமாசங்கர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/13/4ba1fed83490bc98bd36630a20d88c22_original.jpg)
மாத வாடகை 15 லட்சம் ரூபாயும், 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியும் செலுத்த வேண்டும் என மருத்துவர் ராமச்சந்திரனுடன் ஓப்பந்தம் போட்ட நிலையில், உமாசங்கர் கடந்த 2017 முதல் வாடகை தொகையினை முறையாக செலுத்தவில்லை என கூறப்படுகிறது. 3 ஆண்டுகளாக மருத்துவர் உமாசங்கர் முறையாக வாடகை கொடுக்காமல் காலம் தாழ்த்தியதால், 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ராமச்சந்திரனே கட்டும் நிலை ஏற்பட்டது. இதனால் 4 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயை கொடுக்கும்படி உமாசங்கரிடம் ராமசந்திரன் கேட்டுள்ளார். ஆனால், உமாசங்கர் வேறு ஒருவருக்கு மருத்துவமனையை உள்வாடகைக்கு விட முயற்சித்துள்ளார்.
100 கோடி ரூபாய் மதிப்புடைய தனது கட்டிடத்தை அபகரிக்க டாக்டர் உமா சங்கர் முயற்சித்ததால் அதிர்ச்சியடைந்த ராமசந்திரன் இது குறித்து கேட்ட போது, உமாசங்கரும், அவரது மேலாளர் மருதவாணன் என்பவரும் சேர்ந்து மிரட்டியுள்ளனர். இது குறித்து மருத்துவர் ராமச்சந்திரன் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவர் உமாசங்கர் மற்றும் மேலாளர் மருதவாணன் ஆகியோர் மீது கொலை மிரட்டல், மோசடி உட்பட ஐந்து பிரிவுகளில் கோவை குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் கடந்த 2020 ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமினில் வெளிவந்த டாக்டர் உமாசங்கர் தினமும் கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். கடந்த 23.1.2021 ம் தேதி காலை ரத்தினபுரி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு கண்ணப்பநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் மோதியதில் டாக்டர் உமாசங்கர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் இருந்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி காவல் துறையினர் எல்லன் மருத்துவமனையின் உரிமையாளரான பிரபல மருத்துவர் டாக்டர் ராமச்சந்திரனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் டாக்டர் ராமசந்திரன், அம்மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் காமராஜ், மூர்த்தி, உதவியாளர் முருகேஷ், கார் ஓட்டுநர் பழனிசாமி ஆகிய 5 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர். 5 பேர் மீதும் 7 பிரிவுகளில் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட நிலையில், வரும் 27 ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)