BJP AP Muruganandam : சோதனையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள்.. பகிரங்கமாக மிரட்டிய பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம்
BJP AP Muruganandam : காவல்துறை மற்றும் குழுவினரை வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்திற்கு அலைய விடுவேன் என்று மிரட்டினார் கருப்பு முருகானந்தம்..
BJP AP Muruganandam : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு நிலைக்குழு அமைக்கப்பட்டு 3 ஷிஃப்டுகளாக இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு அணி குழு தலைவர் தலைமையில் ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒரு தலைமை காவலர், ஒரு காவலர் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளர் உடன் வாகன சோதனை நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோபி அருகே உள்ள கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில் ஈரோடு - திருப்பூர் மாவட்ட எல்லையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
மிரட்டல் விடுத்த முருகானந்தம்
அப்போது திருப்பூரில் இருந்து வந்த பாஜ வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்த காரையும் கண்காணிப்பு நிலைக் குழுவினர் வாகன சோதனைக்காக நிறுத்தி உள்ளனர். அப்போது காரை ஓரமாக நிறுத்தாமல் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தியதோடு, வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தார். மேலும் கண்காணிப்பு நிலைக்குழுவை சேர்ந்த அலுவலர் முருகேசனின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு ஏ.பி. முருகானந்தம் மிரட்டினார்.
அதைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் மற்ற காவலர்களும் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கூறவே, அவரது பெயரை கூறுமாறு வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார்.
அப்போது அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுவதாக கண்காணிப்பு நிலைக் குழுவினர் கூறியதால், ஆத்திரமடைந்த பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், மரியாதையாக பேசி பழகுங்கள், உங்கள் அனைவரையும் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன் என்று பகிங்கிரமாக மிரட்டினார். அப்போது காவலர்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறியபோது, தொடர்ந்து காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்த வேட்பாளர் எத்தனை இடத்தில் சோதனை செய்வீர்கள் என்று கேட்டதோடு, மிரட்டுகிறீர்களா? மிரட்டுமாறு உங்களிடம் யாராவது கூறி உள்ளனரா? என்று தொடர்ந்து மிரட்டினார். பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காததோடு, காவல் துறை மற்றும் குழுவினரை வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்திற்கு அலைய விடுவேன் என்று மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
டிஆர்பி ராஜா விமர்சனம்
எனது வாகனம் தினந்தோறும் சோதிக்கப் படுகிறது...ஒவ்வொரு முறையும் வாகனத்தின் அனைத்து பகுதிகளும் முழுமையாக சோதிக்கப்படுகிறது.
— Dr. T R B Rajaa (@TRBRajaa) April 5, 2024
அதிகாரிகளின் பணி அதுவே என்று அதை மதித்து முழுமையாக ஒத்துழைப்பது நமது கடமை !அந்தக் கடமையிலிருந்து நான் தவறுவதில்லை. ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும்… https://t.co/rrfvxGoPie pic.twitter.com/41c5Fume2Z
இந்நிலையில் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், “எனது வாகனம் தினம்தோறும் சோதிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் வாகனத்தின் அனைத்து பகுதிகளும் முழுமையாக சோதிக்கப்படுகிறது. அதிகாரிகளின் பணி அதுவே என்று அதை மதித்து முழுமையாக ஒத்துழைப்பது நமது கடமை. அந்தக் கடமையிலிருந்து நான் தவறுவதில்லை.
ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் அதிகாரிகள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் இப்படி எந்த அதிகாரியையும் மிரட்டுவது ஒருபோதும் சரி அல்ல. அதிகார போதையில் பாஜகவினர் அதிகாரிகளை மட்டுமல்ல பொதுவாக மக்களையே மதிப்பதில்லை. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலைமை என்ன ஆகும்? அதிகாரிகளின் நிலைமை என்னவாகும்? சிந்தியுங்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.