கோவை: மயானப் பாதை பிரச்சனை - உடலை அடக்கம் செய்ய ஆற்றில் இறங்கி தூக்கிச் செல்லும் அவலம்
பொள்ளாச்சி அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால், இறந்தவரின் உடலை சேறும் சகதியுமான ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோவிந்தனூர் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் மதுரை வீரன் கோவில் நகர் பகுதியில் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் நான்கு தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த பகுதியில் வசிப்பவர்களில் யாரேஎனும் உயிரிழந்தால், அருகில் உள்ள தனியார் தோட்டம் வழியாக சென்று இறந்தவரின் உடலை தூக்கி கொண்டு ஆற்றின் வழியாக கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. மழை காலங்களில் இறந்தவர்களின் உடலை கயிறு மூலமாக கட்டி உடலை மறுகரைக்கு கொண்டு சென்று சுடுகாட்டில் புதைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால், சேறும் சகதியுமாக உள்ள ஆற்று நீரில் இறங்கி ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் இறந்தவர்களின் உடலை இப்படி ஆபத்தான முறையில் எடுத்துச் சென்று மயானத்தில் அடக்கம் செய்வதாகவும், பல வருடங்களாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆற்றை கடக்க பாலம் அமைத்து தர மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும் வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், பாலம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.
இதேபோல கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் இஸ்லாமியர்களுக்கு இரண்டு ஏக்கர் 36 சென்ட் நிலம் உடல்களை அடக்கம் செய்வதற்காக அரசு இடம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலத்துக்கு அருகே தனியார் தோட்டத்து உரிமையாளர் சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக, அப்பகுதி இஸ்லாமியர்கள் வட்டாச்சியரிடம் புகார் மனு அளித்தனர். இதன் பேரில் வட்டாட்சியர் அந்த இடத்தை நில அளவை செய்து இஸ்லாமியர்களுக்கு உண்டான இடத்தை ஒதுக்கீடு செய்து தந்தார். இந்த நிலையில் நேற்று இஸ்லாமிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்துக்கு செல்லும் போது, பக்கத்து தோட்டத்தில் இருந்து தண்ணீர் அதிகமாக விட்டதன் காரணமாக மாயனத்திற்குள் எங்கு பார்த்தாலும் தண்ணீர் இருந்துள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் உடலை அடக்கம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு அடக்கம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று மதியம் சின்ன பள்ளிவாசல் அருகே மயானத்திற்குள் தோட்டத்திலிருந்து தண்ணீர் அடக்கம் செய்யும் இடத்துக்கு விடக்கூடாது, மயானத்தைச் சுற்றிலும் வேலிகள் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி இஸ்லாமியர்கள் திடீரென 300க்கு மேற்பட்டோர் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் இஸ்லாமியருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக பொள்ளாச்சி - டாப்ஸ்லிப் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்