நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது - நடிகை கஸ்தூரி பேச்சால் அதிர்ந்த அர்ஜூன் சம்பத்
தமிழகத்தை பொறுத்தவரை திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்றார். அப்போது அவருக்கு பின்னால் நின்றிருந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சத்தமின்றி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
கோவை சித்தாபுதூர் பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். பின்னர் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருப்பது குறித்து கேள்விக்கு, அது உண்மை தான். தமிழகத்தை பொறுத்தவரை திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்றார். அப்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சத்தமின்றி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”எதிர்க்கட்சி வலுவாக இல்லாத காரணத்தால் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதிமுக மற்றும் பாஜக ஒன்றாக இல்லை. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போன்று திமுக கட்டுக் கோப்பாக வலுவான கூட்டணி அமைத்து இருக்கிறது. எதிரணி வலுவாக இல்லாததால் நிச்சயமாக திமுக அதிக இடங்களில் வெல்லும் என்பது தான் நிதர்சனமான உண்மை” எனத் தெரிவித்தார். வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற கூட்டத்தில் பங்கேற்ற நீங்கள் திமுகவிற்கு சாதகமாக பேசுகிறீர்களே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, “உண்மையை தானே சொன்னேன். நான் பாஜக உறுப்பினர் இல்லை. நான் ஒரு வலதுசாரி சிந்தனையாளர் மட்டுமே. பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. தனது வாக்கு பாஜகவிற்குதான்.
பாஜக பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொல்வது என்பது தங்கள் கட்சி வெற்றி பெறும் என கூறுவது இயல்பான ஒன்றுதான். இதேபோல் நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அண்ணாமலையின் கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன். சமூகத்தின் மீது அக்கறையுள்ள யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். அதில் நடிகர், நடிகை விதிவிலக்கல்ல” எனத் தெரிவித்தார். நடிகர் விஜய் துவங்கியுள்ள புதிய கட்சியில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளது குறித்த கேள்விக்கு, ”நான் ஒரு தீவிர விஜய் ரசிகை. அவருக்கு எனது வாழ்த்துக்கள். ஒரு உறுதிப்பாட்டுடன் நடிகர் விஜய் செயல்பட வேண்டும்” எனப் பதிலளித்தார்.