Crime: கொலையில் முடிந்த காதல்! பட்டப்பகலில் 18 வயது இளைஞனை வெட்டிக் கொன்ற சிறுவன் - கோவையில் கொடூரம்
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 18 வயது இளைஞரை, மற்றொரு இளைஞர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 18 வயது இளைஞரை, மற்றொரு இளைஞர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 வயது :
கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்ப செட்டி வீதி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது 18 வயது பிரணவ். இவர் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் பிரணவ் இன்று காலை மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள ஒண்டிபுதூர் பேருந்து நிறுத்தம் முன்பாக தனது தோழி ஒருவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென பிரணவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் படுகாயம் அடைந்த பிரணவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து பிரணவை வெட்டிய இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
கோர்ட்டில் சரண்:
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக இது குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் பிரணவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே பிரணவை வெட்டி விட்டு தப்பி ஓடிய அந்த இளைஞர், சூலூர் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு ஆய்வாளரிடம் சரணடைந்துள்ளார்.
காதல் விவகாரம்:
இதையடுத்து அவரை சூலூர் காவல் துறையினர் சிங்காநல்லூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்துனர். பின்னர் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிங்காநல்லூர் டெக்ஸ்டைல் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், காதல் விவகாரத்தில் பிரணவை வெட்டி கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து பிரணவிடம் விசாரணை நடத்தி வரும் காவல் துறையினர் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரணவ் உடன் நின்றிருந்த பெண்ணிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பட்டப்பகலில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.