'இதற்கு எல்லாம் பயப்பட மாட்டோம் என முதல்வர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்’ - நடிகர் சத்யராஜ்
திமுக மீதான மத்திய அரசின் நெருக்கடி தொடர்பான கேள்விக்கு, நாங்கள் இதற்கு எல்லாம் பயப்பட மாட்டோம் என முதல்வரே பதில் சொல்லி விட்டார். முதல்வர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன் என பதிலளித்தார்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உடுமலை கெளசல்யா சங்கரின் 'ழ' என்ற அழகு நிலையத்தை திரைப்பட நடிகர் சத்யராஜ் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் சத்யராஜ் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கெளசல்யா ஆரம்பிக்கும் ழ அழகு நிலையத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். அழகு நிலையத்திற்கு முதல் முறையாக வருகிறேன். எனக்கு அழகு நிலையத்திற்கு செல்லும் பழக்கம் இல்லை. இப்போது ஆண்களும் நிறைய அழகு நிலையத்திற்கு செல்ல ஆரம்பித்து விட்டனர்.
கெளசல்யா ஆரம்பித்த முதல் அழகு நிலையத்திற்கு சூட்டிங் இருந்ததால் வரமுடியவில்லை. இந்த அழகு நிலையம் மேன்மேலும் சிறப்பாக வளர வாழ்த்துகிறேன். கெளசல்யா மிகவும் தைரியமான பெண்மணி. பெண் எப்படி துணிச்சலாகவும், சொந்த காலில் நிற்க வேண்டுமென்பதற்கு அவர் உதாரணமாக இருக்கிறார். பெரியாரிய அமைப்புகள் அவருக்கு பக்கபலமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
நடிகர் விஜய் அரசியல் பிரவேசத்திற்காக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினாரா என்ற கேள்விக்கு, “நடிகர் விஜய் செய்தது நல்ல விஷயம். அவர் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு தெரியாது. அவரே சொல்லாத போது நான் எப்படி சொல்ல முடியும்? விஜய் பெரியார், அம்பேத்கர், காமராஜர் முன்னுதரணமாக வைத்து பேசியது ரொம்ப நல்ல விஷயம். இளைய தலைமுறைக்கு அவர் பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். அவரே இதை சொன்னதை வரவேற்கிறோம்” எனப் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடை தமிழ்நாடு என்று தானே சொல்ல முடியும். நடிகர்கள் பாத்திரங்களுக்கு தகுந்த மாதிரி சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கும். படத்தில் வில்லனாக நடிக்கும் போது சிகரெட் பிடிப்பது போல நடித்துள்ளேன். படத்தில் பேசும் வசனங்கள் அந்த படக்கதைக்கு சம்மந்தமான வசனம். நான் கடத்தல்காரனாக நடித்த போது கடத்தல் செய்வது தவறு அல்ல என பேசியுள்ளேன். போலீசாக நடித்த போது சட்டப்படி நடந்து கொள்ள வேண்டுமென பேசியுள்ளேன். அழகு நிலையங்கள் அந்த காலத்தில் பெரியதாக இல்லை. நான் கோவையில் படிக்கும் போது அழகு நிலையம் கான்செப்ட் வரவில்லை. சென்னை சென்ற பிறகு அழகு நிலையத்திற்கு செல்லும் அளவிற்கும் தலையில் முடியில்லை. அதற்கு அவசியம் இல்லை.
எனது மகள் திவ்யாவிற்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. அவர் அரசியலுக்கு வருவது பற்றி அவர் தான் சொல்ல வேண்டும். அவர் பகுத்தறிவு உள்ள மூடநம்பிக்கை இல்லாத சமூக நீதி சார்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும் என விரும்புகிறேன். நடிகனாக இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திற்கும் சென்று வருகிறேன். எப்படி பார்த்தாலும் எல்லா மாநிலங்களையும் விட விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது” எனத் தெரிவித்தார். திமுக மீதான மத்திய அரசின் நெருக்கடி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “நாங்கள் இதற்கு எல்லாம் பயப்பட மாட்டோம் என முதல்வரே பதில் சொல்லி விட்டார். நான் எந்த பதவியிலும் இல்லை நான் என்ன சொல்ல முடியும்? இருந்தாலும் முதல்வர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்” எனத் தெரிவித்தார்.