ABP Nadu Exclusive: ‘நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுகிறேனா?’ - வானதி சீனிவாசன் பேட்டி
Vanathi Srinivasan Interview: 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் பதிலளித்தார்.
கோவை வெரைட்டி ஹால் சாலையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “திமுக அரசாங்கம் மட்டுமல்ல, இதற்கு முன்பாக இருந்த அதிமுக, திமுக அரசாங்களும் பெண்களுக்கான சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்திருப்பதை நாங்கள் மறுக்கவில்லை. அதனை வரவேற்கிறோம். பெண்களுக்கான 33 % இடஒதுக்கீடு, தாலிக்கு தங்கம் திட்டத்தை இந்த அரசு மாற்றி, பெண் குழந்தைகள் படிப்பிற்கு உதவி திட்டம் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. இன்னும் பெண்களின் பாதுகாப்பு, சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் சுய உதவி குழுக்களை அரசின் கையில் இல்லாமல் முன்னேற உதவுதல் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும். இந்த விஷயங்களில் தொலை நோக்கு பார்வை இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்களா என தெரியவில்லை. அவர்கள் சொல்வது ஒன்று. செய்வது ஒன்றாக உள்ளது. தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 20 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. அவற்றை செயல்படுத்த இன்னும் நேரமிருப்பதாக சொல்கிறார்கள். அதற்கும் மேலாக அரசிற்கு தேர்தல் அறிக்கையில் சொல்லாமல் கூட சில கடமைகளை செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு, தொழில் வாய்ப்பு, புதிய வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அரசு தேவைப்படும் வேகத்தை காட்டவில்லை.
ஈரோடு இடைத்தேர்தலில் ஒட்டு மொத்த அமைச்சரவையும் இறங்கி வேலை பார்க்கிறார்கள். ஒட்டுமொத்த செல்வாக்கையும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக பாஜக, கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என பழ.நெடுமாறன் கருத்து குறித்த கேள்விக்கு, “அது ஒரு கருத்து. அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என நாங்கள் எப்படி சொல்ல முடியும்? பிரபாகரன் உயிரோடு வந்து நின்றால் ஒழிய, அதுபோன்ற கருத்துகள் கருத்துகளாக தான் இருக்கும். பழ.நெடுமாறன் ஒரு தேசிய கட்சியில் இருந்தவர். தமிழகத்தின் பல பிரச்சனைகளில் நல்ல பங்களிப்பு அளித்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்சனையில் தீர்வை நோக்கிய நகர்வுகளில் பல கருத்துகளை அவர் சொல்லி வருகிறார். அவரது கருத்து எப்படி பாஜகவிற்கு சாதகமாக இருக்குமென புரியவில்லை.
இலங்கை தமிழர் வருங்காலத்திற்கும், பல இன்னல்களுக்கும் தீர்வை பாரத பிரதமர் மோடியால் மட்டுமே தர முடியும். சமீப காலமாக பிரதமர் மோடி அரசுடன் உறவை பேண இலங்கை தமிழ் தலைவர்களும், உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இலங்கை தமிழர்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற முடியும் என்றால் பிரதமர் மோடியால் மட்டுமே முடியும். அதற்கான ஆக்கபூர்வமான காரியங்களை பிரதமர் மோடி முன்னெடுகிறார். நுவரேலியாயில் உள்ள வம்சவழி தமிழர்களுக்கான வீடுகள் கட்டுமானம், யாழ்பாணத்திற்கான நேரடி விமனா சேவை, தனுஷ்கோடி கப்பல் போக்குவரது உள்ளிட்டவை செயல்படுத்துவது வருங்கால தீர்வை நோக்கி பயணமாக பார்க்கிறோம்” எனப் பதிலளித்தார்.
2026 ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்குமென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து குறித்த கேள்விக்கு, ”மாநில தலைவர் சொன்ன குறிக்கோளை நோக்கி உழைப்பது மட்டுமே கட்சியின் வேலை” எனப் பதிலளித்தார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, ”ஒரு தேர்தலில் போட்டியிடுவது வேட்பாளரின் தேர்வு அல்ல. முழுக்க முழுக்க கட்சியின் முடிவு. அதனால் கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ, இங்கு யாரை நிறுத்தினாலும் அவர்களது வெற்றிக்காக பாடுபடுவோம்” எனப் பதிலளித்தார்.