Corona Relief Prison | கோவை : சிறையில் இருந்து கொரோனா நிவாரண நிதி வழங்கிய பிரபல ரவுடி
பிரபல ரவுடியாக அறியப்பட்ட மோகன் ராம் மீது கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கோவை மத்திய சிறையில் கொலை வழக்கில் விசாரணை சிறைவாசியாக உள்ள பிரபல ரவுடி மோகன் ராம், முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதன் பேரில் திரைப்பட நடிகர்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களான நிதியுதவியை அளித்து வருகின்றனர். அதேபோல மாணவ, மாணவிகள் தங்களது சேமிப்பு பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி, மற்றவர்கள் நிதியுதவி அளிக்க தூண்டுகோலாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கொலை வழக்கில் சிறையில் உள்ள பிரபல ரவுடி கொரோனா தொற்றை எதிர்கொள்ள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் ராம். 41 வயதான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடியாக அறியப்பட்ட மோகன் ராம் மீது கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல் துறையினர் மோகன் ராமை தீவிரமாக தேடி வந்த நிலையில், தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே சிந்தாமணிபுதூர் பகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகியோர் ஒரு கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த மோகன் ராம் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு மும்பையில் தலைமறைவாக இருந்த மோகன் ராமை கோவை மாவட்ட காவல் துறையினர் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர். பின்னர் மோகன் ராம் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக மோகன் ராம் இருந்து வருகிறார். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பல்வேறு தரப்பினரும் முதலமைச்சரின் நிவாரண நிதி வழங்குவது குறித்து மோகன் ராம் அறிந்துள்ளார். இதையடுத்து சிறைவாசியின் கையிருப்புத் தொகையில் இருந்து 20 ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவெடுத்தார். இதையடுத்து கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணனிடம் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாயை வழங்கினார். நிதியுதவி வழங்கிய மோகன் ராமுக்கு சிறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.