இரட்டை குழந்தைகளை மனநலம் பாதிக்கப்பட்ட பாட்டி தாக்கியதில் ஒரு குழந்தை உயிரிழப்பு - போலீஸ் விசாரணை
’’குழந்தையை அடித்து கொன்ற நிலையில் பாட்டி சாந்தி வீட்டை விட்டு வெளியே தப்பிச் சென்றுள்ளார்’’
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் 3 மாத இரட்டை குழந்தைகளை பாட்டி தாக்கியதில், ஆண் குழந்தை பரிதபமாக உயிரிழந்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் நாகப்பா காலனி மூன்றாவது வீதி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். 31 வயதான பாஸ்கரன் ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா (24) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. அக்குழந்தைகளுக்கு ஆர்யன் மற்றும் ஆரியா ஸ்ரீ என பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஐஸ்வர்யாவின் தந்தை ஷேக்ஸ்பியர் மதுரை மாவட்ட காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். மதுரையில் இருந்து வந்த ஐஸ்வர்யாவின் தாய் சாந்தி (45) பாஸ்கரன் வீட்டில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கியிருந்து குழந்தைகளை கவனித்து வந்ததாக தெரிகிறது. கடந்த 15 ஆண்டுகளாக சாந்தி மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பாஸ்கரன் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். ஐஸ்வர்யா தனது சகோதரர் உடன் மருந்து கடைக்கு சென்றுள்ளார். ஐஸ்வர்யா தனது இரட்டை குழந்தைகளையும் சாந்தியிடம் விட்டு சென்றுள்ளார். அப்போது சாந்தி ஆர்யன், ஆர்யா ஸ்ரீ ஆகிய இரண்டு குழந்தைகளையும் கைகளால் அடித்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்து பார்த்த போது குழந்தைகள் தாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காயமடைந்த நிலையில் இருந்த இரண்டு குழந்தைகளையும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தைகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது ஆர்யன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த ஆர்யா ஸ்ரீ வேறொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதன் பேரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்யா ஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை உடல் நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சாந்தி வீட்டை விட்டு வெளியே தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்த தகவலின் பேரில் துடியலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இதையடுத்து 3 மாத குழந்தை கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய சாந்தியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 3 மாத பேரக் குழந்தையை பாட்டியே கொலை செய்த செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.