வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக பாஜக நிர்வாகியிடம் இருந்து 81 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
பூலுவபட்டி மாரியப்பன் டீக்கடை அருகில் வாக்காளர்களுக்கு சிலர் பணம் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூலுவபட்டி மாரியப்பன் டீக்கடை அருகில் வாக்காளர்களுக்கு சிலர் பணம் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துணை வணிக வரித்துறை அதிகாரி புஷ்பாதேவி தலைமையிலான பறக்கும் படை குழுவினர் அவ்வழியாக வந்த காரினை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அதில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநரும், பாஜக ஆலாந்துறை மண்டல் தலைவருமான ஜோதிமணி (37) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி 81 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வாக்காளர்கள் விபரங்கள் அடங்கிய பூத் சிலிப் ஆகியவை இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து 81 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கைப்பற்றப்பட்ட பணம் பேரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.