Crime: பாலியல் தொழில் விளம்பரம்; 8 லட்சத்தை இழந்த கோவை இளைஞர் - குற்றவாளிகள் சிக்கியது எப்படி?
விளம்பரத்தைப் பார்த்து அழைக்கும் இளைஞர்களிடமிருந்து பல்வேறு காரணங்களை கூறி, பல்வேறு வங்கி கணக்கு மூலம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர்.
லோகாண்டோ வலைத்தளம் மூலமாக Call Girls and call Boys available என்ற போலியான விளம்பரத்தை நம்பி சில இளைஞர்கள் லட்சக்கணக்கான ரூபாய் பணங்களை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொழில்:
இந்த கும்பல் விளம்பரத்தைப் பார்த்து அழைக்கும் இளைஞர்களிடமிருந்து பல்வேறு காரணங்களை கூறி, பல்வேறு வங்கி கணக்கு மூலம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். மேலும் தங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக call boys வேலைக்கு ஆசைப்பட்டு வரும் இளைஞர்களிடமிருந்து அவர்களுடைய ஆவணங்களை பெற்று அவர்கள் பெயரிலேயே வங்கிக் கணக்கும் மொபைல் எண்களும் பெற்று அதை பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர்.
இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த தியாகு என்பவர், இந்த போலியான விளம்பரத்தை பார்த்து 7 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் ஏமாந்ததாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
7 பேர் கைது:
இந்த தனிப்படை போலீசார் சைபர் கிரைம் குற்றவாளிகள் தொடர்பு கொண்ட செல்போன் எண்களின் ஐ.பி முகவரி மற்றும் வங்கி கே.ஒய்.சி விவரங்கள் அடிப்படையில் குற்றவாளிகள் மும்பையில் பதுங்கி இருப்பதை அறிந்தனர். இதைத்தொடர்ந்து மும்பை விரைந்த தனிப்படை காவல் துறையினர் அப்சல் ரகுமான் (24), கர்ணன் (24), தமிழரசன் (23), மணிகண்டன் (22), ஜெயசூர்யா பாண்டியன் (25), விக்னேஷ் வீரமணி (25), பிரேம்குமார் (33) ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.
மும்பையில் வைத்து கைது செய்யப்பட்ட ஏழு பேரில், சைபர் கிரைம் குற்றவாளிகளில் ஐந்து பேர் பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள் ஒருவர் விழுப்புரம் மற்றொருவர் மும்பையைச் சேர்ந்தவர். கைது செய்தவர்களிடமிருந்து 36 சிம்கார்டுகள், 34 செல்போன்கள், 15 வங்கி அட்டைகள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வங்கிக் கணக்கில் இருந்த 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பணத்தை காவல் துறையினர் முடக்கம் செய்துள்ளனர். மேலும் போலி வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர்.
கண்டுபிடித்தது எப்படி?
குற்றவாளிகள் கையில் இருந்த வங்கி நடவடிக்கைகளை கண்டறிந்து வருகிறோம். அதன் அடிப்படையில் மேலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பின்னர் தெரிய வரும் என சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கைது செய்த ஏழு பேரையும் மும்பையில் இருந்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு தனிப்படை காவல் துறையினர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சைபர் க்ரைம் உதவி ஆணையாளர் சரவணன் மற்றும் ஆய்வாளர் அருண் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய உதவி ஆணையாளர் சரவணன், “தியாகு என்பவர் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விளம்பரத்தை பார்த்து ஏமாந்து 3 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பணம் கொடுத்தனர்.
ஏழு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தியாகு மோசடியாளர்களால் மோசடிக்கு உள்ளானார். Kyc மூலம் அடையாளம் காணப்பட்டு மும்பையில் இடம் கண்டறிந்தோம். 34 செல்போன்கள், 15 பேங்க் பாஸ்புக் பிடித்துள்ளோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த குற்றவாளிகள் மும்பை சென்று பாதுகாப்பாக இருக்கலாம் என அங்கிருந்து இந்த சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது வேறு ஏதும் வழக்குகள் இல்லை. இரண்டு வருடமாக இந்த சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர்களிடம் ஆதார் அட்டைகளை வாங்கி பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஆதார் அட்டை மூலம் வங்கி நடவடிக்கைகள் மோசடிகளில் ஈடுபட்டனர். மோசடியாக பெரும் பணத்தை இந்த வங்கி கணக்குகளில் பயன்படுத்தினார். கே.ஒய்.சி தகவல், ஐ.பி முகவரி போன்றவற்றை வைத்து குற்றவாளிகள் இடத்தை கண்டறிந்தோம். பாதிக்கப்பட்டவர்கள் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்துள்ளனர். மோசடி மூலம் கிடைக்கும் பணத்தை கோவா போன்ற மாநிலங்களுக்கு சென்று கொண்டாடி செலவு செய்தனர்” எனத் தெரிவித்தார்.