கோவையில் 120 அடி கிணற்றுக்குள் அதிவேகமாக பாய்ந்த கார்! 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!
பழனிசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே புகுந்த கார், அங்கிருந்த 120 அடி ஆழ கிணற்றுக்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
கோவை தொண்டாமுத்தூர் அருகே அதிவேகமாக சென்ற கார் விவசாய கிணற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த மது என்பவரது மகன் ரோஷன். 18 வயதான இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர், நேற்று ஓணம் பண்டிகையை தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டாடி உள்ளார். தனது உறவினர் ஒருவரின் காரை எடுத்துக் கொண்டு ரோஷன், தனது நண்பர்களுடன் கோவை சிறுவாணி சாலையில் உள்ள செலிபிரிட்டி கிளப்பில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு இரவு முழுவதும் தங்கிய ரோஷன், இன்று காலை சுமார் 6.15 மணியளவில் நண்பர்களுடன் காரில் வடவள்ளியில் உள்ள தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.
ரோஷன் காரை அதிவேகமாக இயக்கிச் சென்றுள்ளார். காரில் அதிவேகமாக சென்ற நிலையில் போளுவாம்பட்டி- தொண்டாமுத்தூர் இடையே உள்ள தென்னமநல்லூர் பகுதியில் செல்லும் போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. பின்னர் அப்பகுதியில் உள்ள பழனிசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே புகுந்த கார், அங்கிருந்த 120 அடி ஆழ கிணற்றுக்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. கிணற்றில் 50 அடிக்கு தண்ணீர் இருந்ததால் நான்கு பேரும் நீரிழ் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளனர்.
இந்நிலையில் காரை ஓட்டிய ரோஷன் மட்டும் காரின் கதவை திறந்து உயிர் தப்பினார். அவரது நண்பர்களான வடவள்ளியை கல்லூரி மாணவர்களான ஆதர்ஷ், ரவி, நந்தனன் ஆகிய மூன்று பேரும் காரிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கியுள்ளனர். கிணற்று தண்ணீரில் மூழ்கி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் வெளியே வந்த ரோஷன் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்த காரை மீட்டனர். மேலும் மூன்று பேரின் சடலங்களையும் நீண்ட நேரம் போராடி கிணற்றுக்குள் இருந்து மீட்ட தீயணைப்புத் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தொண்டாமுத்தூர் காவல் நிலைய காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நண்பர்களுடன் ஓணம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவர்கள் அதிவேகத்தாலும் அஜாக்கிரதையாலும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பேஸ்புக் பழக்கம்! குடும்ப நண்பர்! இரும்பு கம்பியால் கொலை செய்யப்பட்ட இளைஞர்! கோவையில் பகீர் சம்பவம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்