Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பலத்த எதிர்ப்புக்கு இடையே, இந்தியா, தாங்கள் விரும்பும் இடத்தில் வர்த்தகம் செய்யவும், கச்சா எண்ணெய் வாங்கவும் உரிமை உள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பால், இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா தாங்கள் விரும்பும் இடத்திலிருந்து கச்சா எண்ணெய் வாங்க, அதற்கு அனைத்து உரிமையும் உள்ளது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. அவர்கள் கூறியது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
“பலன் கிடைக்கும் இடத்தில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு உரிமை உண்டு“
சில நாட்களுக்கு முன்னர் ரஷ்ய அதிபர் புதின் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்து சென்றார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் வசிக்கும் கிரெம்ளின் மாளிகையின் செய்தித் தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கோவ், இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா இறையாண்மை நாடாக இருக்கிறது என்றும் அது அப்படியே நீடிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். அதனால், வர்த்தகத்தில் தனக்கு பலன் கிடைக்கும் இடங்களில் வர்த்தகம் செய்யவும், கச்சா எண்ணெய் வாங்கவும், இந்தியாவுக்கு உரிமை உண்டு என்று பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவுக்கு நம்பகமான எரிசக்தி கூட்டாளியாக ரஷ்யா நீடிக்கும் என, இந்திய வருகையின் போது, பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு, தங்களது பொருளாதார நலன்களுக்காக, இந்தியா இந்த பாதையை தொடர்ந்து பின்பற்றும் என நம்புவதாகவும் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
இந்தியாவை குற்றம்சாட்டி வரிகளை விதித்த ட்ரம்ப்
முன்னதாக, கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியா மீது குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி, உக்ரைன் மீது அந்நாடு நடத்தும் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவி வருவதாக கூறினார்.
அதோடு நிறுத்தாமல், ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கினால் கூடுதல் வரிகளை விதிப்பதாகவும் மிரட்டினார். ஆனால், இந்தியா அதை கண்டுகொள்ளாமல், மிகுந்த நட்பு நாடான ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்கும் என தெவித்தது.
இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதித்ததோடு, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதம் எனக் கூறி மேலும் வரியை விதித்தார்.
இந்நிலையில், சமீபத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிடும் என்று உறுதி அளித்திருப்பாகவும், ஏற்கனவே எண்ணெய் வாங்குவதை குறைத்து விட்டதாகவும் ட்ரம்ப் கூறிவருகிறார். இந்த சூழலில் தான், ரஷ்யா தற்போது இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.





















