சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
நான்காவது பதிப்பாக நடைபெறும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026 - ஜனவரி 16 முதல் 18 வரை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (09-12-2025) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா (CIBF) - 2026ன் இலச்சினையை வெளியிட்டார்.
’உலகைத் தமிழுக்கும்; தமிழை உலகுக்கும்’ என்ற கொள்கையினை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த இலச்சினை, புத்தகத் திருவிழாவின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தையும் இலக்கிய மற்றும் வாசிப்பு பண்பாட்டை ஊக்குவிக்கும் தமிழ்நாட்டின் தொடர் அர்ப்பணிப்பையும் வலியுறுத்துகிறது.
உலகின் 100 நாடுகளின் பங்கேற்பு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மொழிபெயர்க்கப்படுதல் என்ற மிகப்பெரிய இலக்குகளை எட்டும் முயற்சியாக இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழா அமைகிறது.
பன்னாட்டுப் புத்தகத் திருவிழா எப்போது?
நான்காவது பதிப்பாக நடைபெறும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026 - ஜனவரி 16 முதல் 18 வரை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. பன்னாட்டுப் புத்தகத் திருவிழா பள்ளிக் கல்வித் துறையின் முன் முயற்சியில், பொது நூலக இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் இணைந்து நடத்துகின்றன.
சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா சர்வதேச அளவிலான கருத்தரங்குகள், புத்தகக் காப்புரிமை
வர்த்தகங்கள் மற்றும் இலக்கிய மேடைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவமான B2B தளம் ஆகும். பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், இலக்கிய முகவர்கள் நேரடியாக கலந்துரையாடி புத்தகக் காப்புரிமை பரிமாற்றங்கள் மற்றும் கலாச்சார இலக்கிய பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வாய்ப்பை இந்த புத்தகத் திருவிழா உருவாக்குகிறது.
2023-இல் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 24 நாடுகளைக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த முயற்சி, 2024-இல் 40 நாடுகள் 39 மொழிகளுடன், 2025-இல் 64 நாடுகள் மற்றும் 81 மொழிகளுடன் விரிவடைந்தது. 2026-ல் முதல் முறையாக, இந்த B2B தளம் பொதுமக்கள் பங்கேற்கும் திறந்த தளமாக மாற்றப்படுகின்றது. இதன் மூலம் தமிழ்நாட்டுப் பதிப்பாளர்கள் உலக வாசகர்களை நேரடியாகச் சந்திக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பம் உருவாகிறது.

185 நூல்கள் மொழிபெயர்ப்பு
மூன்று ஆண்டுகளில் 110 தமிழ் எழுத்தாளர்களின் 185 நூல்கள் - 26 மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தை சர்வதேச அரங்கில் புத்தம் புதிய சிறந்த நோக்கோடு, நிலைப்படுத்துவதே 2026 சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பல்வேறு நாடுகளின் பங்கேற்பு:
- தமிழ்நாடு பதிப்பாளர்களுக்கான பிரான்ஸ் அரசின் சிறப்பு அமர்வுகள்
- TEDA Türkiye என்ற துருக்கிய அரசின் மானியம் பற்றிய கருத்தரங்கு மற்றும் விவாதங்கள்
- போலோனியா குழந்தைகள் புத்தகக் கண்காட்சியின் - ஓவியம், வடிவமைப்பு, கார்ட்டூன் மற்றும் மொழிபெயர்ப்பு அமர்வுகள்
- ஈரான் அரசின் புத்தகப்படங்கள் பற்றிய வழிமுறை வகுப்புகள்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவின் இந்தாண்டு மதிப்புறு விருந்தினராக, உலகின் மிகச் சிறந்த புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றான ப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியின் ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டு அழைக்கப்பட்டுள்ளனர்.
பங்கேற்பது எப்படி?
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இந்திய பதிப்பாளர்கள், இலக்கிய முகவர்கள், மொழிபெயர்ப்பாளர்களுக்கு உலக தலைசிறந்த பதிப்பு அமைப்புகளோடு இணையும் அற்புதமான வாய்ப்புகளை வழங்குகிறது. இந்நிகழ்விற்கு மேன்மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள், கண்காட்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள், வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் முன்பதிவுடன் பங்கேற்கலாம்.
தமிழ்நாட்டு இலக்கியங்களை உலகெங்கும் உள்ள வாசகர்களிடம் கொண்டுசெல்வதற்கு தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியத் திட்டம், CIBF Fellowship திட்டம் முதலியவை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்கள் மொழிபெயர்ப்பு, புத்தக வெளியீடு, நூல்கள் விநியோகம், கலாச்சாரச் சுற்றுப்பயணங்கள், பதிப்பாளர்கள்-எழுத்தாளர்கள் சந்திப்பு ஆகியவற்றிற்கு பெரிதும் உறுதுணையாக உள்ளன.






















