வெள்ளம் பாதித்த கன்னியாகுமரியில் நிவாரண உதவிகளை வழங்கி முதல்வர் ஆய்வு
’’கடந்த 11ஆம் தேதி முதல் பெய்த தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறி உள்ளது’’
குமரி மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய முதல்வர் பொதுமக்கள் கொடுத்த மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
குமரி மாவட்டத்தில் கடந்த 11ஆம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது, கடந்த 3 நாட்களாக பெய்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. குறிப்பாக பல்வேறு இடங்களில் குளங்கள் உடைந்து பல்வேறு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது, இதனால் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு 65 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நாகர்கோவில்-கன்னியாகுமரி, நாகர் கோவில்- திருவனந்தபுரம் ரயில் பாதைகளில் மண்சரிவு மற்றும் வெள்ளநீர் தேங்கியதன் காரணமாக நேற்று 3ஆவது நாளாக ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பகுதியானது வெள்ள நீரில் மூழ்கியது, பல வீடுகள் சேதம் அடைந்து காணப்பட்டது, இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.
மூன்று நாட்களாக மின் விநியோகமும் தடைபட்டது, வெள்ளம் சூழ்ந்த பல்வேறு பகுதிகளில் சிக்கிய பொதுமக்களை பேரிடர் மேலாண்மைத்துறை மீட்பு படையினர் அங்கிருந்து அவர்களை மீட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைத்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 5000 பேர் வரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 3000 ஆக மாறியது. தற்போது படிப்படியாக மழை குறைந்த நிலையில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது, இந்த நிலையில் இன்று முகாம்களில் 1000 பேர் வரை தங்கி உள்ளனர்.
பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது, பல்வேறு பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின, இது குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிடுவதற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தந்தார். அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார். நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போக்குவரத்துதுறை அமைச்சரும் நெல்லை மாவட்ட கண்காணிப்பு அமைச்சருமான ராஜகண்ணப்பன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் முக ஸ்டாலினுக்கு சால்வை கொடுத்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வரவேற்றார்.
தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பெரியகுளத்தில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் வீடுகளை சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டார். அப்பகுதியில் பொது மக்கள் அளித்த மனுக்களை பெற்று கொண்டார். பின்னர் தோவாளை முகாமிற்கு நேரில் வந்து பார்வையிட்டு முகாமில் இருக்கும் 75 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் தேவையான பாய், அரிசி, பருப்பு, எண்ணெய், பிரட், பிஸ்கட் போன்ற பொருள்களை வழங்கினார். அதன் பின்னர் திருப்பதிசாரம் பகுதியில் மழை வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டார்.
ஆய்வின் போது வருவாய்த்துறை அமைச்சர் KKSSR.ராமசந்திரன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி மாவட்ட பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.