EMI கட்ட பணம் இல்லாததால் வீட்டில் தனியாக இருந்த பெண்னை கொலை செய்த இளைஞர் !! அதிர்ச்சி சம்பவம்
மொபைல் போன் தவணை கட்ட பணம் தேவைப்பட்டதால் , வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகையை திருடிச் சென்ற வாலிபர் மொபைல் போன் சிக்னலால் போலீசாரிடம் சிக்கினார்

மொபைல் போன் தவணை கட்ட பணம் தேவைப்பட்டதால் , வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து, நகையை திருடிச் சென்ற வாலிபர் மொபைல் போன் சிக்னலால் போலீசாரிடம் சிக்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சூளைமேனி கிராமத்தில் வசித்து வந்தவர் சாவித்ரி ( வயது 55 ) இவரது கணவர் சுகுமார். இவர்களுக்கு சுரேந்தர், மனோஜ்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி, திருநின்றவூர், கொளத்துார் பகுதிகளில் வசிக்கின்றனர். சாவித்ரியின் கணவர் சுகுமார் உயிரிழந்து விட்டார். சாவித்ரி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். தரை மற்றும் முதல் தளம் கொண்ட இவரது வீட்டில், தரைத்தளத்தில் வசித்து வந்துள்ளார்.
மாடியில் தேர்வாய் சிப்காட்டில் பணியாற்றும் இருவர் வாடகைக்கு வசித்து வந்தனர். மாடியில் உள்ள வீட்டை சாவித்ரி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து, சாவித்ரியை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் அணிந்திருந்த கம்மல், செயின் உள்ளிட்ட 2.5 சவரன் நகை, மொபைல் போனை திருடிக் கொண்டு, மர்ம நபர் தப்பியோடியுள்ளார்.
ஊத்துக்கோட்டை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர். மர்ம நபர் திருடிச் சென்ற சாவித்ரியின் மொபைல் போன் சிக்னலை பின் தொடர்ந்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ( வயது 26 ) என்பவரை கைது செய்தனர். மொபைல் போன் தவணை கட்ட பணம் தேவைப்பட்டதால் நகைக்காக சாவித்ரியை கொலை செய்ததாக வெங்கடேசன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கத்தியை காட்டி பள்ளி மாணவனிடம் இருசக்கர வாகனம் பறிப்பு
சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் ( வயது 42 ) இவரது மகன் ஹரிஹரன் ( வயது 17 ) பிளஸ் 2 மாணவர். இவர் நண்பர்கள் இருவருடன் தண்டையார்பேட்டை, வீராகுட்டி தெருவில் பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், கத்திமுனையில் ஹரிஹரனிடம் ஸ்கூட்டரை எடுக்குமாறு மிரட்டி பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். தண்டையார்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போஸ்ட் ஆபீஸ் எதிரே வண்டியை நிறுத்துமாறு கூறி, ஹரிஹரனை இறக்கி விட்டு ஸ்கூட்டருடன் அந்த நபர் தப்பி சென்றார். தண்டையார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வடமாநில தொழிலார்களிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது
சென்னை படப்பை அருகே ஆரம்பாக்கத்தில் இரு தினங்களுக்கு முன் வடமாநில தொழிலாளர் ஒருவரை தாக்கிய மர்ம நபர்கள் இருவர் மொபைல் போன் மற்றும் 500 ரூபாயை பறித்து சென்றனர். விசாரித்த படப்பை போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ் ( வயது 20 ) மோகன் ( வயது 26 ) ஆகியோரை கைது செய்தனர்.
இதே போல் எம்.கே.பி.நகர், எருக்கஞ்சேரியில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான வியாசர்பாடி வி.பி.காலனியைச் சேர்ந்த ரவுடி சஞ்சய் ( வயது 26 ) என்பவர் கைது செய்யப்பட்டார்.
ரவுடிகளை வெட்டிய இருவர் கைது
சென்னை வியாசர்பாடி எஸ்.எம்.நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 26 ) ஜெ.ஜெ.ஆர்.நகரைச் சேர்ந்தவர் விமல் ( வயதே 26 ) ரவுடிகளாக வலம் வந்த இருவரும் வியாசர்பாடி குட்ஷெட் அருகில் மது அருந்தியுள்னர். அங்கு வந்த மர்ம நபர்கள், திடீரென கார்த்திக்கை தலையிலும்,விமலை கையிலும் வெட்டி தப்பியுள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எம்.கே.பி. நகர போலீசாரின் விசாரணையில் முன்விரோதம் காரணமாக வியாசர்பாடி, முல்லை நகரைச் சேர்ந்த சஞ்சய் ( வயது 21 ) எஸ். எம். நகரைச் சேர்ந்த ஆகாஷ்குமார், 23 ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.





















