5 மாவட்டங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க ராணிப்பேட்டையில் ஆக்ஸிஜன் தயாரிப்பு பணிகள் தீவிரம் .
ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க ராணிப்பேட்டை மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில், இயங்கும் காவேரி கார்போனிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு சிலிண்டர் ஆக்சிஜன் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
5 மாவட்டங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க ராணிப்பேட்டையில் ஆக்ஸிஜன் தயாரிப்பு பணிகள் தீவிரம் - அரசு,தனியார் மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பெற தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலையின் பரவல் உச்சம் பெற்று உயிரிழப்புகள் அதிகரித்துவரும் சூழலில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு அதிக அளவில் நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் பாரத பிரதமர் நரேந்திர மோடி, மாநில அரசுகள் தங்கள் தேவைக்கேற்றாற்போல் ஆக்சிஜனை நேரடியாக கொள்முதல் செய்துகொள்ளலாம் என்ற அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார் .
அடுத்த இரண்டு வாரங்களுக்கு தமிழ் நாட்டிற்கு 840 மெட்ரிக் டன் ஆக்சிஜென் தேவை இருப்பதால் முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழ் நாட்டிற்கு மத்திய அரசால் விநியோகம் செய்யப்படும் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்படி ஒரு புறம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்க, மறுபுறம் தமிழ் நாட்டில் இயங்கி வரும் சிறிய பெரிய ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய தொழில் நிறுவனங்களை தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜன்களை மருத்துவ பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து மருத்துவமனைகளுக்கு அனுப்பும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க ராணிப்பேட்டை மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் இயங்கும் காவேரி கார்போனிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக 5 மாவட்டங்களுக்கு சிலிண்டர் ஆக்சிஜன் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி ராணிப்பேட்டை, வேலூர்,திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிலிண்டர் ஆக்சிஜன் தேவைப்படும் பட்சத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கோவிட்-19 கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் 04172 273188 மற்றும் 273166 ஆகிய இரண்டு எண்களையும் தொடர்புகொண்டு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று சிலிண்டர் ஆக்சிசன் பெற்று செல்லலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கிளாஸ்டன் புஷ்பராஜ் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ABP செய்தி நிறுவனத்திடம் பேசிய காவேரி கார்போனிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் அமிர்த கணேசன், “முதற்கட்டமாக எங்கள் தொழிற்சாலை மூலம் நாள் ஒன்றுக்கு 7 கன அடி (47 லிட்டர் ) கொள்ளளவு கொண்ட 700 ஆக்சிஜென் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யமுடியும் . தேவை அதிகம் இருப்பின் ஆக்சிஜன் விநியோகத்தை மேலும் அதிகரிக்க எங்களால் முயன்ற முயற்சியை செய்வோம் . இன்னும் இரண்டு நாட்களில் எங்கள் நிறுவனத்தில் இருந்து மருத்துவமனைகளின் தேவைகேற்றர் போல் ஆக்சிஜன் விநியோகம் துவங்கப்படும்” என்று தெரிவித்தார் .