ஃபார்முலா கார் பந்தயம்: இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம்: சென்னையில் வழியை தெரிஞ்சிக்கோங்க!
ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் , சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடை கோரி பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பும் , அரசு தரப்பும் வாதங்களை முன் வைத்தனர். பின்பு கார்பந்தயம் நடத்த எந்த தடையும் இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து , சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டது.
அதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வான சென்னை ஃபார்முலா ரேசிங் அன்று 30.08.2024 முதல் , 01.09.2024 வரை சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சி 30.08.2024 முதல் 01.09.2024 வரை மதியம் 12.00 மணி முதல் 22:00 மணி வரை நடைபெற இருப்பதால் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தெற்கிலிருந்து வரும் வாகனங்கள்
காமராஜர் சாலையில்
போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை , அண்ணாசாலை , பெரியார் சிலை. சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரயில் நிலையம்). ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம்.
மவுண்ட் ரோட்டில்
வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். சிவானந்த சாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும். வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை.
சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக , பல்லவன் சாலை , ஈவிஆர் சாலை , சென்ட்ரல் இரயில்வே நிலையம் , பெரியமேடு காந்தி இர்வின் வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்.
கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் :
தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள். வாலாஜா அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம் , முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12.00 மணி முதல் 22.00 மணி வரை செல்ல தற்காலிக தடை செய்யப்பட்டுள்ளன.