அண்ணாமலை கேட்க சொன்னாரா ? ..போயா !! டென்சன் ஆன டி.ஆர் பாலு - நடந்தது என்ன?
10 ஆயிரம் கோடி சொத்து மதிப்பு எங்கிருந்து வந்தது என அண்ணாமலை கேள்வி எழுப்பியது குறித்த கேள்விக்கு , செய்தியாளரை " போயா " என கூறிய டி.ஆர்.பாலு

டி.எம்.கே ஃபைல்ஸ் ;
முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை , வெளியிட்ட “டி.எம்.கே. ஃபைல்ஸ்” எனும் குற்றச் சாட்டுகளில், தனக்கு எதிராகப் பொய்யான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி , அவர் மீது திமுக மக்களவை உறுப்பினரும் , திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில் ஆஜரான டி.ஆர் பாலு ;
இதுகுறித்து, அவர் தொடர்ந்த வழக்கில், உரிய ஆதாரங்கள் இன்றி தனது பெயருக்கு தீங்கிழைக்கும் நோக்கில் , அண்ணாமலை அவதூறு கருத்துக்களைப் பரப்பி வருவதாகக் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜூலை 17 - ம் தேதி வழக்கு விசாரணைக்காக அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார் ஆனால் டி.ஆர். பாலு ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஆகஸ்ட் 28 - ஆம் தேதி நடைபெறும் நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்த சூழலில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு இன்று காலை 11 மணியளவி்ல் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பில் உள்ள ஆதாரங்களை வழங்கினார்.
அதன்பின் நீதிமன்ற வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு ;
21 நிறுவனங்களுக்கும் எனக்கும் தொடர்பு என அண்ணாமலை சொல்லியிருந்தார். இன்று ஆஜராகி சாட்சியமளித்த போது 18 நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தேன். ஒன்றரை மணி நேரம் நேரில் ஆஜராகி அத்தனை விளக்கமும் அளித்தேன். இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22 - ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
அண்ணாமலை கேட்க சொன்னாரா ?
அதன் பின் 2004 - ல் ஊழல் செய்ததால் தான் 2010 - ல் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்றும் , அப்போது போகாத மானம் இப்போது போய் விட்டதா என அண்ணாமலை கேட்டது குறித்த கேள்விக்கு "அண்ணாமலை கேட்க சொன்னாரா ? " என பாலு செய்தியாளரிடம் கேள்வி எழுப்பினார்.
மொத்தம் 10 ஆயிரம் கோடி சொத்து மதிப்பு எங்கிருந்து வந்தது என அண்ணாமலை கேள்வி எழுப்பியது குறித்த கேள்விக்கு , செய்தியாளரை " போயா " என கூறி விட்டு சென்றார்.





















