Capitation Fee in School: நன்கொடை, நிதி வசூலிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்! - தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் எச்சரிக்கை
தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் நன்கொடை, பள்ளி வளர்ச்சி நிதி (Capitation Fees) ஆகியவற்றை வசூலிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் நன்கொடை, பள்ளி வளர்ச்சி நிதி (Capitation Fees) ஆகியவற்றை வசூலிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் திட்டத்தைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்ற தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
''அரசுப் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்களை வைக்கும் திட்டம் உள்ளது. முதல்கட்டமாகப் பெண்கள் பள்ளிகளில் தொடங்கி வைக்கத் திட்டமிட்டுள்ளோம். பின்பு பல்வேறு பள்ளிகளுக்கும் திட்டம் கொண்டு செல்லப்படும்.
இந்த காலகட்டத்தில் தங்களுடைய குழந்தைக்கு எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் என்று பெற்றோர் நினைக்கின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும்.
இதற்கிடையில் கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில், தனியார் பள்ளிகளுக்கு கண்டனமோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. வேண்டுகோள்தான் விடுக்கிறேன். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மாணவர்களிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபட வேண்டாம்.
தனியார் பள்ளிகளின் கற்பித்தல் பணி என்பது சமுதாயத்திற்கு மிக மிக அவசியமாகும். அரசுப் பள்ளியில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு தனியார் பள்ளியை விட்டுவிட மாட்டோம். இலவச, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, தகுதிவாய்ந்த குழந்தைகளை நீங்கள் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றைச் செய்யாமல் நன்கொடை, பள்ளி வளர்ச்சி நிதி (Capitation Fees) ஆகியவற்றை வசூலிப்பதை, தனியார் பள்ளிகள் தயவுசெய்து நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் கடந்த ஓராண்டில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த முறை தமிழக சட்டப் பேரவை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இதன் மூலம் சுமார் 18 ஆயிரம் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டும் அதிகப்படியான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பெறுவார்கள் என்ற நம்பிக்கை அரசுக்கு உள்ளது. இந்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும்''.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்