TN 12th Public Exam: நாளை பிளஸ் 2 தேர்வு: காலை 9 மணிக்கு வந்தால் போதும்: தேர்வுகள் துறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் நாளை 8.37 லட்சம் மாணவர்கள் எழுதும் பிளஸ் 2 தேர்வு தொடங்க உள்ள நிலையில், காலை 9 மணிக்கு மாணவர்கள் வந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை 8.37 லட்சம் மாணவர்கள் எழுதும் பிளஸ் 2 தேர்வு தொடங்க உள்ள நிலையில், காலை 9 மணிக்கு மாணவர்கள் வந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன.
இந்த சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், நாளை மாநிலம் முழுவதும் காலை 10 மணிக்கு 12ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. தேர்வை 8,37,311 மாணவர்கள் எழுத உள்ளனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னதாக மாணவர்கள் 8 மணிக்கே வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 9 மணிக்குத் தேர்வு மையங்களுக்கு வந்தால் போதும் என்று தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், மாணவர்கள் 8 மணிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கே பொருந்தும் என்றும் மாணவர்கள் 9 மணிக்கு வந்தால்போதும் என்றும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.45 மணிக்கு முதல் மணி ஒரு முறை அடிக்கப்படும். அப்போது தேர்வர்கள் தேர்வறைக்கு வருகை புரிதல் வேண்டும்.
9.55 மணிக்கு இரண்டாவது மணி 2 முறை அடிக்கப்படும். அப்போது அறைக்கண்காணிப்பாளர் வினாத்தாள் உறைகளை மாணவர்களிடம் காண்பித்து, இரு மாணவர்களிடம் கையெழுத்து பெற்று, உறைகள் பிரிக்கப்படும்.
காலை 10 மணிக்கு மூன்றாவது மணி 3 முறை அடிக்கப்படும். அப்போது மாணவர்களுக்குத் தேர்வுத் தாள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற பொதுத் தேர்வுகள் எப்போது?
இதற்கிடையே மே 6-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்தத் தேர்வை 9,55,139 பேர் எழுதுகின்றனர். மே 10-ம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்தத் தேர்வை 8,85,053 மாணவர்கள் எழுத உள்ளனர்.
பொதுத் தேர்வுகளில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுதத் தடை விதிக்கப்படும். தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்