இனி தாம்பரம் தான்... அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்.. பயணிகள் அலையத் தேவையில்லை... என்ன விஷயம்?
சென்னையின் மூன்றாவது ரயில் முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் உருவெடுக்க உள்ளது.
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தை தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலையம், முக்கிய ரயில் நிலையமாக உருவெடுத்து வருகிறது.
சென்னை ரயில் நிலையங்கள்
சென்னையின் பிரதான ரயில் முனையங்களாக , சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிக ரயில்கள் இயக்கப்படுவதால், சிக்னலுக்காக பல ரயில்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.
இதனால் சென்னைக்கு மூன்றாவது ரயில் முனையம் என்பது காலத்தின் கட்டாயமாகியுள்ளது . இன்றைய சூழலில் தாம்பரம் ரயில் நிலையம் என்பது, மின்சார ரயில்கள் சென்று வருவதற்கு மிகவும் முக்கிய வழித்தடமாக உள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மார்க்கமாக இயக்கப்படும் ரயில்கள் முக்கிய இடத்தை பெறுகின்றன.
தாம்பரம் - சென்னை கடற்கரை
தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை தற்பொழுது 4 பாதையாக செயல்பட்டு வருகிறது. ஆனால் சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூர் வரை மூன்று பாதை மட்டுமே உள்ளது. இதில் இரண்டு பாதையில் மின்சார ரயில்களும் , ஒரு பாதையில் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்களும் சென்று வருகின்றன.
தற்பொழுது வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டால் அது மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
தாம்பரம் ரயில் நிலையத்தின் தேவை...
எனவே இனி புதியதாக மாநிலம் மற்றும் தென் மாவட்டத்திற்கு ரயில்கள் அறிவிக்கப்பட்டால் தாம்பரத்திலிருந்து செல்லும் வகையில், ரயில் பாதையை ஏற்படுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதனால் சென்னை கடற்கரை முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை சுமார் 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு , நான்கு வழி பாதை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது.
நான்காவது பாதை அமைக்கும் பணி...
இதற்காக சுமார் 279 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நான்காவது பாதை அமைக்கும் பணி வேகம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணி கடந்த ஆண்டு துவங்கிய நிலையில் சிந்தாதிரிப்பேட்டை முதல் சென்னை கடற்கரை வரை உள்ள பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
பறக்கும் ரயில் சேவைக்காக அமைக்கப்பட்ட தண்டவாளங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, நான்காவது பாதை அமைக்கும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த இரண்டு மாதத்திற்குள்ளாக இந்த பாதை அமைக்கும் பணி நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று பறக்கும் ரயில் பாதை அமைப்பதற்கு தேவையான இடம் கடற்கரை வசம் இருந்த 110 மீட்டரும் , ரயில் அமைப்பதற்காக அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சிந்தாதிரிப்பேட்டை முதல் சென்னை கடற்கரை வரை ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது ரயில் முனையமாக உருவெடுக்கும் தாம்பரம்
தற்பொழுது தாம்பரம் ரயில் நிலையம் மறு சீரமைக்கும் பணிக்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மூன்றாவது ரயில் முனையமாக தாம்பரம் உருவெடுத்தால் , சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து ரயில்களை இயக்குவதில் சிக்கல் தீர்ந்து, மேம்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வட மாநிலம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தென் மாவட்டங்களுக்கு புதிதாக அறிவிக்கப்படும் அனைத்து ரயில்களும் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.