ஸ்விகி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ! ஆர்டர் சாப்பாட்டுக்கு அல்லோலப்படும் வாடிக்கையாளர்கள்!
தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் உணவு ஆர்டர் செய்வதற்கு பெரும்பாலான உணவகங்கள் கிடைப்பதில்லை என்றும் டெலிவரி செய்ய அதிக நேரம் ஆகிறது என்றும் ட்விட்டரில் பல பயனர்கள் புகார் அளித்துள்ளனர்.
ஸ்விகி நிறுவனம் தொழிலாளர்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் ஆன்லைன் உணவு விநியோக சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வந்துள்ளன.
ஸ்விகி ஊழியர்களின் பிரச்சனை
தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் இடங்களில் உணவு ஆர்டர் செய்வதற்கு பெரும்பாலான உணவகங்கள் கிடைப்பதில்லை என்றும் டெலிவரி செய்ய அதிக நேரம் ஆகும் என்பதாகவும் ஆப் காட்டுகிறது என்றும் ட்விட்டரில் பல பயனர்கள் புகார் அளித்துள்ளனர். ஸ்விக்கியின் விரைவு வர்த்தக சேவையான இன்ஸ்டாமார்ட்டும் பாதிக்கப்பட்டுள்ளது என்று பலர் புகார் தெரிவித்து வருகின்றனர். ஸ்விகி உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும். தற்போது கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளின்படி, வாரம் ஒருமுறை வழங்கப்படும் ஊக்கத்தொகையை நிறுதியது மட்டுமின்றி, வேலை 12 மணி நேரத்திலிருந்து 16 மணி நேரம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருந்த வேலை நேரத்தின் படி, ஸ்விகி ஊழியர்கள் 12 மணி நேரம் வேலை செய்தால் ஒரு வார சம்பளமாக ரூ.14,500 கிடைக்கும். தற்போதுள்ள விதிகள் படி 16 மணி நேரம் வேலை செய்தாலும் வாரம் ரூ.12,000 வரை மட்டுமே கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
ஊக்கத்தொகை நிறுத்தம்
இதோடு வாரவாரம் கிடைக்கும் ஊக்கத்தொகையும் நிறுத்தப்படுவதால், பெட்ரோல், உணவு உள்பட முக்கிய செலவுகள் போக கையில் 7 ஆயிரம் மட்டுமே இந்த புதிய விதிமுறையின்படி மிஞ்சும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் குறிப்பிட்ட அளவு மட்டுமே சம்பளம் கிடைக்கும் என்றும், அதன்மூலம் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் கூறுகிறார்கள். எனவே பழைய நடைமுறையின்படி ஊக்கத்தொகை மற்றும் சம்பளம் வழங்க வேண்டுமென ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு போராடி வருகின்றனர்.
ஸ்விகி பதில்
ஒரு அறிக்கையில், Swiggy, "ஆர்டர்களைப் பொருட்படுத்தாமல் ஊழியர்கள் நன்றாக சம்பாதிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தும் அதே வேளையில், டெலிவரி தொழிலாளிக்கு அதிக வசதிகளை அளிக்கவே புதிய பேஅவுட் முறை உருவாக்கப்பட்டது. Swiggy இன் டெலிவரி நிர்வாகிகள் எவ்வளவு சம்பாதிக்க முடியும் அல்லது எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் டெலிவரி நிர்வாகிகளுடன் நாங்கள் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறோம், மேலும் அவர்கள் டெலிவரிகளை விரைவில் தொடங்குவார்கள் என்று நம்புகிறோம்,” என்று ஸ்விக்கியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
டெலிவரி பார்ட்னர்கள் வருத்தம்
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்விகி நிறுவனத்தில் டெலிவரி செய்து வரும் ஒருவர் கூறுகையில் முழுநேரம் வேலை செய்பவர்கள், ரூ.11,500 சம்பாதிக்க வாரத்திற்கு 180 ஆர்டர்களை முடிக்க வேண்டும் என்று புதிய விதிகள் கூறுகின்றன என்று தெரிவிக்கிறார். அவர் பேசுகையில், "பல ஆர்டர்களை எங்களால் உறுதியாக முடிக்க முடியாது. எங்களை முடிக்கவும் விடமாட்டார்கள். நாங்கள் ஒரு ஆர்டர் குறைத்து 179 ஆர்டர்களை முடித்தாலும் இந்த தொகை எங்களுக்கு கிடைக்காது. காலை 5.30 மணிக்கு வேலைக்கு வந்து இரவு 11 மணி வரை சாலைகளில் இருக்க வேண்டும். எங்களுக்கும் குடும்பங்கள் உள்ளன, இப்படி வேலை செய்தால் அவர்களைப் பார்க்கவே முடியாது. 180 ஆர்டர்கள் முடிக்க வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு நாளைக்கு 26 ஆர்டர்களை முடிக்க வேண்டும், அதற்கு நாங்கள் 16 மணி நேரத்திற்கும் மேலாக சாலைகளில் இருக்க வேண்டும்", என்று கூறினார். 180 ஆர்டர்கள் முடிக்கவேண்டும் என்று கூறுவது மிக அதிகமாக உள்ளது என்று பலர் குறிப்பிடுகின்றனர். 110 ஆர்டர்கள் முடித்தால் ஊதியம் ரூ.7,000 என்றும், 125 ஆர்டர் என்றால் ரூ.7,500 என்றும், 140 ஆர்டர்கள் என்றால் ரூ.8,500 என்றும், 160 ஆர்டர்கள் செய்தால் ரூ.9,750 என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் 180 ஆர்டர் தான் அதிகபட்சம். 179 ஆர்டர்கள் முடிந்தாலும் ரூ.9,750 மட்டுமே கிடைக்கும் என்பதால் நஷ்டம் ஏற்படும் என டெலிவரி பார்ட்னர்கள் தெரிவித்துள்ளனர்.