ஆர்டர்லி முறை ஒழிப்பு..... தமிழக அரசு, டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு..!
ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தகது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தகது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
காவல் துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, காவலர் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்கவும் நேரிடும் என தெரிவித்ததுடன், உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்தும் விசாரித்து வருகிறார்.
ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழக உள்துறை முதன்மை செயலாளாரின் உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆர்டர்லி விவகாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது நீதிபதி, காவல்துறை பணியை குறைத்து மதிப்பிடவில்லை எனவும், ஒரு சில அதிகாரிகள் மட்டுமே தனிப்பட்ட முறையில் உள்ள நல்லெண்ணம் காரணமாக ஆர்டர்லிகளை பயன்படுத்துவதில்லை என தெரிவித்தார்.
மேலும், அனைவருக்கும் ஒரு உதவியாளர் தேவை. ஆனால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக கவலை அளிக்கிறது என அதிருப்தி தெரிவித்ததுடன், ஆர்டர்லிகளும் தங்களுக்கு வேறு ஆதாயம் கிடைக்கும் என்பதால், இதுகுறித்து புகார் சொல்வதில்லை என்றும் சுட்டிக்காட்டினார். பொதுமக்கள் பணம் வீணடிக்கப்படுவது குறித்து சமூக ஆர்வலர்கள் புகாரளித்தாலும் நசுக்கப்படுகின்றனர் அல்லது சுடப்படுகின்றனர் என வேதனை தெரிவித்தார்.
ஆர்டர்லி ஒழிப்பு குறித்து நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிப்பது உதவியாக உள்ளதாக தெரிவித்த அரசு தரப்பு, காவல்துறையினர் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்தவுடன் மற்றவர்களும் திரும்பப்பெறப்படுவார்கள் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது. ஒரு காவல் உயர் அதிகாரி வீட்டில் 5 காவலர்கள் பணியமர்த்தப்பட்டால் மாதம் ஒன்றுக்கு இரண்டரை லட்ச ரூபாயை அரசு செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும், அதனை டிஜிபி அறிக்கையில் குறிப்பிட்டு அனைத்து அதிகாரிகள் சார்பாக டிஜிபி உத்தரவாதம் அளித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், டிஜிபி எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்றும், பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார். ஆர்டர்லி முறையை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது தெரிவதாகவும் நீதிபதி திருப்தி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பயிற்சி பெற்ற காவலர்கள் ஆர்டர்லிகளாக பயன்படுத்தப்படக் கூடாது என்று தெரிவித்த நீதிபதி, உயர் அதிகாரிகளுக்கு தேவைப்பட்டால் இருப்பிட உதவியாளர்களை நியமிக்கலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளார். காவல்துறையில் உள்ள வாகனங்களும், முன்னேறிய நடைமுறையும் தவறாக பயன்படுத்தபடக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
இதன்பின்னர் இந்த வழக்கில் அடுத்த வாரம் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.