Nallakannu : இ.கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி..! உடல் நிலை எப்படி இருக்கிறது? வேதனையில் தொண்டர்கள்..!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2022ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது அவருக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது.
இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி!https://t.co/wupaoCQKa2 | #Nallakannu #CPI #Communist #Chennai pic.twitter.com/HDAynHpRxP
— ABP Nadu (@abpnadu) October 1, 2022
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசால் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
1925 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் நான்கு சகோதரர்கள், ஐந்து சகோதிரிகள் கொண்ட பெரிய குடும்பத்தில் மூன்றாவதாகப் பிறந்தவர் நல்லகண்ணு.
சுமார் 25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டு காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார். தற்போது கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவராக இருந்து வருகிறார்.
அவரது 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அதைக் கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார்.
தமிழ்நாடு அரசு ‘அம்பேத்கர் விருது’ கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும், மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார். இவர் மீதான அன்பினாலும் அக்கறையினாலும் ஒரு பத்திரிகையாளர் அவருக்குக் கார் ஒன்றைப் பரிசாக அளித்தபோது அதனையும் கட்சிக்கே கொடுத்துவிட்டார்.
தனக்கென பெரிதாக எந்தத் தேவையும் நோக்கமும் கொண்டவராக ஒருபோதும் அவர் இருந்ததில்லை என்பதன் எளிய சான்றுகளே இவை. இன்றளவும் விவசாயிகள், தொழிலாளர் நலனுக்காகவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகவும், கார்ப்பரேட்களுக்கு எதிராகவும், சாதி-மத வெறிக்கு எதிராகவும் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார் ஆர். நல்லகண்ணு.
காசியில் பாரதியார் வாழ்ந்த வாழ்க்கைக் குறிப்புகளைத் திரட்டிக் கட்டுரை எழுதினார். ‘பி, சீனிவாசராவின் வாழ்க்கை வரலாறு (1975)', விடுதலைப் போரில் விடிவெள்ளிகள் (1982), கங்கை காவிரி இணைப்பு (1986), பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள் (1986), நிலச்சீர்திருத்தம், மடம், கோயில் நிலங்கள்.., கிழக்கு ஜெர்மனியில் கண்டதும் கேட்டதும் எனும் பயண நூல் ஆகியவற்றை எழுதியுள்ளார். “இந்திய விவசாயிகள் பேரெழுச்சி‘ எனும் நூலை மொழிபெயர்த்துள்ளார்.