சென்னையில் அதிர்ச்சி !! ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை !!
வெளிமாநில லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்த நபர் கைது. 26 லாட்டரி சீட்டுகள், ரூ.70,000 பறிமுதல்

சென்னை எழும்பூரில் ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரிகள் விற்பனை
சென்னை எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் , எழும்பூர் மெட்ரோ இரயில் நிலையம் அருகே கண்காணித்த போது, அங்கிருந்த ஒரு நபர் காவல் குழுவினரை கண்டதும் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து தப்பிக்க முயன்றுள்ளார்.
அந்த நபரை காவல் குழுவினர் மடக்கி பிடித்து விசாரணை செய்த போது, அந்த நபர் லேப்டாப் மற்றம் செல்போன் மூலம் இணையதளம் வாயிலாக தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகளை பதிவிறக்கம் செய்து சட்ட விரோத விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
அதன் பேரில் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்ட விரோத லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெரியமேடு பகுதியை சேர்ந்த பழநிநாதன், ( வயது 62 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் லாட்டரி சீட்டு விற்ற பணம் ரூ.70,000 மற்றும் ஐபோன் உட்பட 2 செல்போன்கள் 1 லேப்டாப் மற்றும் 1 எலக்டிரிக் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பழநிநாதன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் திருடிய 3 நபர்கள் கைது. 22.5 கிராம் தங்க நகைகள் மீட்பு. 1 இருசக்கர வாகனம் பறிமுதல்
சென்னை கொடுங்கையூர் சீதாராமன் நகர் 4 - வது தெருவில் வசித்து வரும் சூசைராஜ் ( வயது 35 ) என்பவர் பாடியில் உள்ள அவரது சித்தப்பா இறந்து விட்டதால், காலையில் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பாடிக்கு சென்று இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் வைத்திருந்த சுமார் 23 கிராம் எடை கொண்ட கம்மல், நெக்லஸ், மூக்குத்தி, மோதிரங்கள் ஆகிய தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து சூசைராஜ் கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப் பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து , திருட்டில் ஈடுபட்ட மணலி சின்ன சேக்காடு பகுதியை சேர்ந்த சஞ்சய் ( வயது 19 ) மற்றும் கொடுங்கையூர் ஜம்புலி தெரு பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா ( வயது 20 ) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுனில், ( வயது 20 ) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து , சுமார் 22.5 கிராம் எடை கொண்ட கம்மல், நெக்லஸ், மோதிரங்கள், மூக்குத்தி ஆகிய தங்க நகைகள் மீட்கப்பட்டு, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்று நோட்டமிட்டு பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தங்க நகைகள் திருடிக் கொண்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் சஞ்சய் மீது 2 குற்ற வழக்குகளும், ஜெயசூர்யா மீது ஒரு திருட்டு வழக்கும் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.





















