Sathya Murder : "என் மகளைப் பற்றி யாரும் தப்பா பேசாதீங்க.. மனுஷங்களா இருந்தா பேசாதீங்க" : சத்யாவின் தாயார்
செய்திகள் உறுதியாவதற்கு முன்பே, சில செய்தி நிறுவனங்கள் சத்யா சதீஷை காதல் செய்தார் என்று குறிப்பிட்டதாக, விரக்தி அடைந்த சத்யாவின் தாயார் செய்தி நிறுவனங்களை திட்டி தீர்த்துள்ளார்.
தன் மகள் காதலித்தார், ஏமாற்றினார் என்று தவறாக செய்தி வெளியிட்ட மீடியாக்கள் மீது அதிருப்தி தெரிவித்துள்ளார் பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட மாணவி சத்யாவின் தாயார்.
மாணவி சத்யா கொலை
சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை, அந்த பகுதியைச் சேர்ந்த சதீஷ், கடந்த 13-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் வைத்து, மின்சார ரயில் முன்பு தள்ளி கொலை செய்தார். இதனையடுத்து சதீஷை கைதுசெய்த ரயில்வே போலீஸ், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனிடையே, இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் தங்கள் முதற்கட்ட விசாரணையை கடந்த 15-ம் தேதி தொடங்கி, சம்பவம் நடந்த பரங்கிமலை ரயில் நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார் ஆகியோரிடம் விசாரித்தனர்.
விரக்தி அடைந்த தாயார்
பிறகு அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து வந்தனர். இந்த விசாரணையின்போது, சம்பவம் தொடர்பான முக்கிய சிசிடிவி ஆதாரங்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அந்த மின்சார ரயிலை இயக்கிய ரயில் ஓட்டுநரிடமும் விசாரணை நடைபெற்றது.
தற்போது சிபிசிஐடி போலீசார், வலைவீசி எல்லா பக்கமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்திகள் உறுதியாவதற்கு முன்பே, சில செய்தி நிறுவனங்கள் சத்யா சதீஷை காதல் செய்தார் என்று குறிப்பிட்டனர். இதனால் விரக்தி அடைந்த சத்யாவின் தாயார், சில மீடியாக்களையும், தனிநபர்களையும் திட்டி தீர்த்துள்ளார்.
சத்யா காதலித்தாரா?
நடந்ததை விளக்கிய அவர், "என் பொண்ணு பின்னாடி அவன் சுத்துனான். நான் போய் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ண்ட் கொடுத்தேன். அவனை மூணு வருஷம் ரிமாண்ட் பன்றேன்னு சொன்னாங்க. ஆனா அவங்க குடும்பமே என் கால்ல வந்து விழுந்துச்சு. இனிமே உன் பொண்ணு பின்னால வர மாட்டான், நாங்க அவனை ஃபாரின் அனுப்ப போறோம்னு சொன்னாங்க. கால்ல விழுறாங்களே பாவமேன்னு விட்டேன். இப்போ என்ன பாவமா ஆக்கிட்டு போய்ட்டாங்க. என் பொன்னும் போயி, என் புருஷனும் போய்ட்டு நான் இருக்குறதா வேண்டாமான்னு இருக்கேன்", என்றார்.
மீடியாக்களுக்கு நேர்மை வேண்டும்
மேலும் மீடியா குறித்து பேசிய அவர், "என் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. யாரும் இஷ்டத்துக்கு எழுதாதீங்க. யாராரோ வந்தாங்க. வந்து என்ன ப்ரயோஜனம். என் பொண்ண பத்தி தப்பு தப்பா பேசறாங்க. நேர்மையா போடறதா இருந்தா போடுங்க, இல்லன்னா தயவுசெஞ்சு போடாதீங்க. நீங்க போட்டு என்னாகப்போகுது. என் பொண்ணும், புருஷனும் திரும்பி வந்துடப் போறாங்களா. நீங்க யாரும் வர வேண்டாம். நான் செத்ததுக்கு அப்புறம் வந்து நியூஸ் போடுங்க. அந்த பையனை அதே ரயில்வே ஸ்டேஷன்ல ட்ரெயின்ல தள்ளிவிடுங்க" என்று விரக்தியில் பேசினார்.