Watch Video | குப்பைகள்... ஆக்கிரமிப்புகள்.. பெருவெள்ளத்துக்கான முக்கிய காரணங்கள் என்னென்ன?
அடிப்படையில் ஏரி என்றால் மழை நீரால் நிரம்பும் நீர்ப்பாசனத் தொட்டி .அந்த நீர்நிலைகள் மீதே கட்டிடங்கள் கட்டப்பட்டன. நீங்கள் ஏரிக்குள் வீடு கட்டியிருந்தால் உங்கள் வீடும் நிரம்பும்.
சில நாள் மழைக்கே தாக்குப் பிடிக்க முடியாமல் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகி தலைநகரமே தத்தளிக்கிறது. 2015-ஆம் ஆண்டு நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருவெள்ளம் ஏற்பட்டது. அதன்பிறகு பெருவெள்ள பாதிப்புகளுக்கு முக்கியமாக என்ன காரணம் என்பது தொடர்பான அறிக்கையை சிஏஜி தாக்கல் செய்தது. அதன்படி நகரில் உள்ள மொத்த ஏரிகளில் 69% அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும், 525 நீர்ப்பாசன குளங்களில் நீர்த்தேக்க முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 381 குளங்களின் நீர்வழிப் பாதைகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. 2005ஆம் ஆண்டு முதலே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இந் த ஆக்கிரமிப்புகள் நடைபெற்றதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
நகரை விரிவுபடுத்துகிறோம் என்ற பெயரில் நீர்நிலைகள் மீது ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளது. அந்த நீர்நிலைகள் மீதே கட்டிடங்கள் கட்டப்பட்டன. அதற்கு உதாரணமாக கொரட்டூர் ஏரி, சிட்லப்பாக்கம் ஏரி, வில்லிவாக்கம் ஏரி ஆகியவற்றை சொல்லலாம். வேளச்சேரியில் ஏரியே காணாமல் போயிருக்கிறது. இந்த 2 புகைப்படங்களில் ஒன்று வேளச்சேரியின் பழைய படம். இன்னொன்று வேளச்சேரியின் தற்போதைய படம். முதல் படத்தில் வேளச்சேரி ஏரி தனது முழு கொள்ளளவுடன் இருப்பதைக் காண முடிகிறது. இரண்டாவது படத்தில் வேளச்சேரி ஏரியில் கிட்டத்தட்ட 90 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள், கட்டிடங்கள் உள்ளன.
அடிப்படையில் ஏரி என்றால் மழை நீரால் நிரம்பும் நீர்ப்பாசனத் தொட்டி. மழைகாலத்தில் ஏரிகள் நிரம்பும். நீங்கள் ஏரிக்குள் வீடு கட்டியிருந்தால் உங்கள் வீடும் நிரம்பும். அதனால்தால் வேளச்சேரி பகுதி ஒவ்வொரு மழையிலும் தத்தளிக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய அரசும் அதை கண்டுக்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த கட்டடங்களுக்கு அனுமதி வழங்கியதே சிஎம்டிஏ தான். அந்த இடங்களுக்கு சட்டவிரோதமாக பட்டாவும் வழங்கப்பட்டிருக்கிறது.
2015 வெள்ளத்துக்கு காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசுக்கு 2018ல் தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்தது.
இதன்பிறகு 2019ல் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் அடையாறு, கூவம் ஆறு பகுதிகளில் 71,000க்கும் அதிகமான ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும் அதில் 14, 000க்கும் அதிகமான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். அதற்கும் பொதுமக்கள் தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. இந்தப் பகுதிகளில் இருக்கும் பெருநிறுவனங்களின் கட்டடங்களுக்கு எந்தவிதமான சலசலப்பையும் ஏற்படுத்தாமல் அப்பாவி மக்களுடைய குடிசைகளை மட்டும் அகற்றி அவர்களை கண்ணகி நகர், கே.பி பார்க் போன்ற பகுதிகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் வழங்கப்பட்ட குடியிருப்புகள் தரமற்ற நிலையில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது இன்னொரு விவகாரம்.
குடிசை பகுதிகளை அகற்றிய அரசு நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மருத்துவமனை, கல்வி நிறுவனங்களை கண்டுக்கொள்ளவே இல்லை.
அதேபோல 2015ல் பெருவெள்ளம் ஏற்பட்ட பிறகு வெள்ளத்துக்கு காரணம் என்ன என்பதை கண்டறிய தமிழ்நாடு அரசு சார்பிலும் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் சார்பிலும் அரசுக்கு ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் மழைநீர் வடிவதற்கான வடிகால் கால்வாய்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இல்லை என தெரிவிக்கப்பட்டது. அதேபோல ஏற்கெனவே இருக்கும் கால்வாய்கள் பராமரிப்பு இல்லாத காரணத்தினால் வேலை செய்ய முடியாத அளவிற்கு செயலிழந்து காணப்பட்டது குறித்தும் அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதன்பின் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டாலும் இன்று வரை அந்தப் பணிகள் நிறைவு பெறவில்லை.
புவியியல் ரீதியாக அரசு சென்னை பற்றின ஒரு ஸ்டடியை அரசு நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றினால்தான் நீண்டகால பலன்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஆக்கிரமிப்புகள் மட்டுமல்லாது அலட்சியமான அதிகாரிகளின் மெத்தனப்போக்கும் சென்னை வெள்ளத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டியதன் விளைவாக நீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் துார் வாரப்பட்டாலும், திடக்கழிவு மேலாண்மையை சரியாக கையாளாததால், பல்வேறு வடிகால்கள், நீர்நிலைகளில், குப்பை, பிளாஸ்டிக் போன்ற கழிவுகள் அடைத்து, நீர் செல்ல முடியாமல் தடுத்து விட்டன.
உதாரணத்துக்கு மாம்பலம் கால்வாயை எடுத்துக்கொண்டால் கால்வாய் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள், கால்வாய் மேல்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்க கனரக உபகரணங்களை கொண்டு செல்ல குப்பைகளை கால்வாயில் கொட்டியது தெரியவந்துள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் இருந்து தி.நகர் வரையிலான 1.7 கி.மீ நீர்வழிகளில் அமுக்கப்பட்ட குப்பைகள் தான் கால்வாய் அடைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால்தான் தி.நகர் பகுதியில் 4 நாட்களாகியும் நீர் வடியாமல் இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதிகளோடு தொடர்புடையவை. திநகர் வெள்ளம் வடிந்தால்தான் மேற்குமாம்பலம் நீர் வடியும். மேற்குமாம்பலம் நீர் வடிந்தால்தான் கோடம்பாக்கம் வடியும். இந்தக் காரணங்களால்தான் தலைநகரம் தத்தளிக்கிறது.
2015 போன்ற ஒரு நிலை வந்துவிடக்கூடாது என மாநகராட்சி முழு வீச்சில் செயல்படுவதை கவனிக்க முடிகிறது. ஆனாலும் நிவாரணப் பொருட்கள் வழங்குவது, மழைக்காலத்தில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பது என இல்லாமல் நிரந்தர தீர்வை நோக்கி அரசு நகர வேண்டும் என்பதுதான் எல்லாருடைய கோரிக்கையாகவும் உள்ளது.