Online Rummy : விடாது துரத்தும் ஆன்லைன் ரம்மி...பணத்தை இழந்த விரக்தியில் மருந்து நிறுவன பிரதிநிதி தற்கொலை....சென்னையில் அதிர்ச்சி...!
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்த மருந்து நிறுவன பிரதிநிதி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Online Rummy : ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்த மருந்து நிறுவன பிரதிநிதி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (36). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் மருந்து நிறுவன பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், ஆன்லைன் ரம்மி என்ற தளத்தை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாடி சிறு தொகையை முதலில் வென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாடுவதை அறிந்த அவரது மனைவி, விளையாடுவதை நிறுத்த வேண்டும் என பலமுறை கூறியுள்ளார். ஆனால் வினோத் குமார் விளையாடுவதை நிறுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடிமையான வினோத் குமார், பல்வேறு லோன் ஆப்களில் சுமார் ரூ. 20 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். பின்பு, லோன் ஆப்களில் 20 லட்சத்தை வாங்கி வைத்து விளையாடிய அவர் மொத்த தொகையையும் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்காக பல்வேறு லோன் ஆப்களில் கடனை வாங்கிய நிலையில், அதனை செலுத்த கூறி அவருக்கு நெருக்கடி வந்தது. கடன் வாங்கி செலுத்த முடியாத நிலையில் இருப்பதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். பின்பு, லோன் ஆப்களில் வந்த நெருக்கடியிலும், பணத்தை இழந்த விரக்தியிலும் வினோத் குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரவு பணி முடித்து வீடு திரும்பிய போது, வினோத் குமார் தூக்கில் தொங்கியதை கண்ட அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் போலீசார் அவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதை நம்பி பணத்தை இழப்பவர்கள் ஏராளம். மேலும், இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவர்களில் நிலை மோசமாகி வருகிறது. இதை நம்பி ஏமாந்து நடக்கும் தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இதனை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)