" வண்டியில் ஏறு , எங்க போனும் நான் இறக்கி விடுகிறேன் " பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்
இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் , மும்பை விமான நிலையத்தில் கைது

" வண்டியில் ஏறு , எங்க போனும் நான் இறக்கி விடுகிறேன் " பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்
பாண்டிச்சேரியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் , சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கி பெசன்ட் நகரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், 30.01.2025 அன்று காலை, வேலைக்கு செல்வதற்காக, பெசன்ட்நகர், தாமோதரபுரம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் பெண்ணை பின் தொடர்ந்து வந்து பின்னர் இருசக்கர வாகனத்தை அப்பெண்ணின் முன்பு நிறுத்தி ‘‘வண்டியில் ஏறு, எங்கு செல்ல வேண்டுமோ இறக்கி விடுகிறேன்‘‘ என கூறி உள்ளார்.
உடனே, அப்பெண் ‘‘யார் நீ ? எதற்காக வரவேண்டும் , முடியாது‘‘ எனக் கூறி அங்கிருந்து செல்ல முயன்ற போது , அந்த நபர் மேற்படி பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு , அவரது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாகவும், பாதிக்கப்பட்ட பெண் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் கோபால் ( வயது 41 ) என்பதும் குற்ற சம்பவத்திற்கு பின்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்ததின் பேரில், நபரின் விவரங்கள் குறித்து Lookout Circular தயார் செய்து விமான நிலையத்திற்கு அனுப்பி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து , தேடி வந்த நிலையில் கோபால் 21.12.2025 அன்று சீனாவிலிருந்து, விமானம் மூலம் மும்பைக்கு வந்த போது பிடித்து வைத்துள்ளதாக மும்பை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சாஸ்திரி நகர் காவல் நிலைய காவல் குழுவினர் உரிய சட்ட நடவடிக்கைகளுடன் மும்பை விமான நிலையம் சென்று, இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவான கோபால் ( வயது 41 ) என்பவரை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட கோபால் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
சட்ட விரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 5 நபர்கள் கைது. 160 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்.
சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் ஐ.ஒ.சி. யார்டு அருகே கண்காணித்து, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 5 நபர்களை விசாரணை செய்து, அவர்களை சோதனை செய்த போது, அவர்கள் உடல் வலி நிவாரண மாத்திரைகள் மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
அதன் பேரில் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த கணேஷ் (எ) பிளாக்கேட் ( வயது 29 ) , சந்தோஷ் (எ) கொக்கு ( வயது 25 ) , கார்த்திக் (எ) மொட்டை கார்த்திக் ( வயது 23 ) , ஆனந்தகுமார் (எ) E.B.ஆனந்த் ( வயது 23 ) , நதீம் ( வயது 22 ) ஆகிய 5 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 160 எண்ணிக்கைகள் கொண்ட NITRAZEPAM உடல்வலி நிவாரண மாத்திரைகள், மாத்திரைகள் விற்பனைக்கு பயன்படுத்திய 1 Dio இருசக்கர வாகனம் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் சந்தோஷ் (எ) கோக் என்பவர் ஆர்.கே. நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது கொலை, போதை பொருள் வழக்கு உட்பட 8 குற்ற வழக்குகளும், கார்த்திக் (எ) மொட்டை கார்த்திக் மீது 6 குற்ற வழக்குகளும், ஆனந்தகுமார் (எ) E.B.ஆனந்த் மீது ஒரு குற்ற வழக்கும், நதீம் மீது 2 குற்ற வழக்குகளும் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 5 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.





















