சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மேலும் இரண்டு நீதிபதிகள், 1 கூடுதல் நீதிபதி நியமனம்..!
நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் உரசல் போக்கு நிலவி வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இரண்டு நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரை செய்து வருகிறது. அந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கலாம்.
நீதித்துறை vs மத்திய அரசு:
ஆனால், சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமலும் இருந்துள்ளது. கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.
ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சமீபத்தில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இரண்டு நீதிபதிகள் நியமனம்:
நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் உரசல் போக்கு நிலவி வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இரண்டு நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல, ஒரு கூடுதல் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 222இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமன உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பட்டு தேவானந்த், தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி தேவராஜூ நாகராஜன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல, பெரியசாமி வடமலை இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில், வழக்கறிஞர்கள் எல். விக்டோரியா கவுரி, ஆர். கலைமதி, ஜி.கே. திலகவதி உள்ளிட்ட மூன்று வழக்கறிஞர்கள் உள்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர். இதில், விக்டோரியா கவுரி நியமனம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
விக்டோரியா கவுரி, வெறுப்பு பேச்சு பேசியதால் அவரை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாட்டின் மூன்றாவது பழமையான உயர் நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றமாகும். ஆங்கிலேயர்கள் காலத்தில், விக்டோரியா மகாராணி உத்தரவின்பேரில் சென்னை உயர் நீதிமன்றம் கட்டப்பட்டது.
மேலும் படிக்க: திருமண உறவில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது குற்றமாகுமா? உச்ச நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு என்ன?