Family ostracized : சாதி மாறி திருமணம் செய்ததால் குடும்பத்தையே விலக்கிவைத்த நாட்டாமைக்காரர்கள்
"ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்துவைத்த நீங்கள் இங்கு வரக்கூடாது . நீங்கள் உயிரோடு இருந்து எங்கள் ஜாதி மானத்தை வாங்குவதை விட குடும்பத்தோடு தூக்கிட்டு சாவதே மேல் என்று எங்களை தற்கொலைக்கு தூண்டுகின்றனர் "
![Family ostracized : சாதி மாறி திருமணம் செய்ததால் குடும்பத்தையே விலக்கிவைத்த நாட்டாமைக்காரர்கள் love marriage issue : family ostracized by village bigwigs . Family ostracized : சாதி மாறி திருமணம் செய்ததால் குடும்பத்தையே விலக்கிவைத்த நாட்டாமைக்காரர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/18/7cc41b1f871efec0e1496514a29d77ce_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆம்பூர் அருகே 73 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் , தனது பேத்தி மாற்று சமூகத்தினரை காதல் திருமணம் செய்துகொண்டதால் தங்களது ஒட்டுமொத்த குடும்பத்தையும் நாட்டாமைக்காரர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மூதாட்டி அவரது புகாரில் தனது ஊரை சேர்ந்த அந்த இரு நாட்டாமைக்காரர்களும் தங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஒதுக்கி வைத்ததோடு மட்டும் நில்லாமல் தற்பொழுது தற்கொலை செய்து கொள்ள தூண்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் .
திருப்பத்தூர் மாவட்டம் , ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட மின்னுர் கிராமத்தில் வசிப்பவர் சுந்தராம்பாள் (73). இவருடைய கணவர் ராதாகிருஷ்ணன் நாயுடு சில வருடங்களுக்கு முன் இறந்த நிலையில் சுந்தராம்பாள் தனது மகன் சரவணன் (51) உடன் வசித்து வருகின்றார். ஆம்பூர் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துவரும் சரவணனுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர் . இதில் தனது இளைய மகளான S கோமளா (25 ) என்பவர் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு தங்கள் கிராமத்தில் மாற்று வகுப்பை (வன்னியர் சமூகத்தை ) சார்ந்த B பாரத் குமார் என்ற இளைஞரை காதலித்து பெற்றோர்கள் , ஊர் பெரியவர்கள் சம்மதம் ஏதும் பெறாமல் திருமணம் செய்துகொண்டார். இதனை அறிந்த சரவணனின் சமூகத்தை சார்ந்த நாட்டாமைக்காரர்கள் , சரவணன் குடும்பத்தினரை ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளனர் . சரவணன் குடும்பத்திற்கு ஊரில் நடக்கும் எந்த இன்பத்துன்ப நிகழ்ச்சிகளுக்கும் கலந்து கொள்ள கூடாது என்று தடை விதித்துள்ளனர் .
இது தொடர்பாக நம்மிடம் பேசிய சரவணன், "எனது இளைய மகள் கோமளா 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மதம் 1-ஆம் தேதி, மாற்று சமூகத்தை சார்த்த எலக்ட்ரிகல் உதிரி பாகங்கள் விற்கும் கடைவைத்திருக்கும் பாரத் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த எங்கள் சமூகத்திற்கான நாட்டாமை சதீஷ்குமார் மற்றும் துணை நாட்டாமை ராஜேந்திரன் , ஊர் பஞ்சாயத்தை கூட்டி ஊர் கட்டுப்பாட்டை மீறி உனது மகள் மாற்று சமூகத்தினரை திருமணம் செய்து உள்ளதால் உங்கள் குடும்பம் ஊரில் நடக்கும் எந்த விசேஷங்களிலும் கலந்து கொள்ள கூடாது என்றும் . அப்படி விசேஷங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்றால் ஊர் பஞ்சாயத்திற்கு 5500 ரூபாய் அபராதம் செலுத்திய பின்னர் கலந்துகொள்ளலாம் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். பஞ்சாயத்தார் கூறிதைப்போலவே நான் அபராத தொகையான 5500 ரூபாய் செலுத்திய பின்னரும் . நாங்கள் ஊர் விசேஷங்களில் கலந்துகொள்ள அனுமதி மறுக்க பட்டு வருகின்றது .
நான் 2018-ஆம் ஆண்டு அந்த அபராதத்தை செலுத்திய பின்னர் எங்கள் பகுதியில் இதுவரை 4 துக்க நிகழ்ச்சிகளும் , 10-க்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகளும் நடந்துள்ளது . நானும் என் குடும்பத்தாரும் அதில் கலந்துகொள்ள செல்லும்பொழுது எல்லாம் ஊர் நாட்டாமை சதிஷ் மற்றும் துணை நாட்டாமை ராஜேந்திரன் ஆகியோர் எங்களை இழிவான வார்த்தைகளில் பேசுவதோடு நாங்கள் அந்த விசேஷங்களில் இருந்து வெளியேறினால்தான் , அந்த நிகழ்ச்சிகளை மேற்கொண்டு நடத்த அனுமதிப்போம் என்று அச்சுறுத்தி எங்களை எந்த விசேஷங்களிலும் பங்குகொள்ள விடாமல் தடுக்கின்றனர் .
மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி என் அம்மாவின் தங்கை முறையான சாலம்மாள் 70 , (எனக்கு சித்தி முறையாக வேண்டப்படுபவர் ), வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார். இதில் கலந்து கொள்வதற்காக நான் , எனது தாய் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சென்றபோது , அங்கு வந்து சதிஷ் குமார் மற்றும் ராஜேந்திரன் எங்களை கடுமையான வார்த்தைகளில் பேசி திட்டினார்கள் .
"ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்து வைத்த நீங்கள் இங்கு வரக்கூடாது . நீங்கள் உயிரோடு இருந்து எங்கள் ஜாதி மானத்தை வாங்குவதை விட குடும்பத்தோடு தூக்கிட்டு சாவதே மேல் என்று ஊர் மக்கள் அனைவரின் முன்னிலையிலும் எங்களை அவமானப்படுத்தி அந்த துக்க நிகழ்வில் இருந்து எங்கள் அனைவரையும் வெளி ஏற்றி விட்டனர். இந்த அவமானத்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளோம்". எனவே சட்டத்துக்கு புறம்பாக எங்களை ஊரை விட்டு ஒதுக்கிவைத்து , தற்கொலை எண்ணத்தை தூண்டும் சதீஷ்குமார் மற்றும் ராஜேந்திரன் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எங்களது குடும்பத்தின் சார்பாக எனது தாய் சுந்தராம்பாள் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்” என்று தெரிவித்தார் .
இது தொடர்பாக நம்மிடம் பேசிய இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மற்றும் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனிரத்தினம், சுந்தராம்பாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள ஊர் முக்கியஸ்தர்களான சதீஷ்குமார் மற்றும் ராஜேந்திரன் மீது விசாரணை தொடங்கி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் .
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)