பல்லாவரம் முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசலுக்கு குட் பாய்..! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தமிழ்நாடு அரசு..!
Chennai Traffic : " பல்லாவரம் முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல், தீர்வு காண குழு அமைத்த தமிழ்நாடு அரசு "
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் வெளியே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - Kilambakkam bus terminus
தென் மாவட்டம் செல்லும் பயணிகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு, மாற்றாக கிளாம்பாக்கத்தில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தினமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பயணிகள் பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், சுப முகூர்த்த நாட்களில் 80 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்துகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பொழுது,பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தன, சிக்கல்கள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகின்றன.
கிளாம்பாக்கம் உயர்மட்ட மேம்பாலம் - kilambakkam flyover
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததால், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட துவங்கி உள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் பெரிதும் அவதி அடைய தொடங்கியுள்ளனர். எனவே கிளாம்பாக்கம் பேருந்து முனையும் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ( ஜிஎஸ்டி சாலையில் ) உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த சிக்கல்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், பல்லாவரம் முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் இருந்த நிலையில், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டம் தீட்டியுள்ளது.இதன் ஒரு பகுதியாக நேற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து துறைகள் சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மே.அன்பரசன் கலந்து கொண்டு ஒவ்வொரு துறை ரீதியாக இருக்கும் பிரச்சினைகளை கேட்டு அறிந்தார்.
குழு அமைத்த தமிழ்நாடு அரசு
இதனை தொடர்ந்து பத்து பேர் கொண்ட அனைத்து துறைகள் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழு அடுத்த 10 நாட்களுக்குள் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என்ன ? போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர தீர்வுகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தீர்வுகள் என்ன ?
- ஒரு சில இடங்களில் பேருந்துகள முறையான இடங்களில் நிறுத்துவது கிடையாது அவற்றை ஒழுங்கு செய்ய வேண்டும்.
- விதிகளை மீறி பல்வேறு இடங்களில் கடைகள் அமைக்கப்பட்டிருப்பது, ஆக்கிரமிப்புகள் ஆகியவை போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கிறது
- பொதுமக்கள் சாலையைக் கடக்க முறையான வசதிகள் இல்லை, எனவே நகரம் படிக்கட்டுகளை அமைத்தால் பொதுமக்கள், அவற்றை பயன்படுத்துவார்கள். உள்ளிட்ட பல்வேறு தீர்வுகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் அலசப்பட்டது