பாரிஸ் டூ சென்னை... தொடங்கியது முதல் நேரடி விமான சேவை - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் பாரிஸ் நகரிலிருந்து சென்னைக்கும், அதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை அன்று சென்னையிலிருந்து பாரிஸ் நகருக்கும் இடையே விமான சேவை செயல்படும்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து சென்னைக்கு முதல் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாரிஸ் நகரிலிருந்து டெல்லி, மும்பை,பெங்களூருவுக்கு ஏர் பிரான்ஸ் விமான சேவை இருந்துவருகிறது. இந்தநிலையில், நான்காவது சென்னைக்கும் நேரடியாக விமானம் இயக்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகா் பாரிசிலிருந்து, உள்ளூர் நேரப்படி நேற்று முற்பகல் 11.49 மணிக்கு ஏர் பிரான்ஸ் விமான நிறுவனத்தின் ’ஏஎப்108’ விமானம் சென்னைக்குப் புறப்பட்டது. 9 மணி நேரம் 50 நிமிடப் பயணத்துக்குப் பிறகு, அது நள்ளிரவு 12.28 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தை அடைந்தது.
விமான ஊழியர்கள் 19 பேர் உள்பட இந்த விமானத்தில் 111 பேர் பயணம் செய்தனர். விமான ஓட்டிகள், விமானப் பொறியாளர்கள், பிற பணியாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் விமானநிலையம் அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டனர்.
வாரம் ஒரு முறை இருவழியாக இந்த விமான சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் பாரிஸ் நகரிலிருந்து சென்னைக்கும், அதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை அன்று சென்னையிலிருந்து பாரிஸ் நகருக்கும் இடையே விமான சேவை செயல்படும் என ஏர் பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை ஜூன் 28 சென்னையியில் இருந்து நள்ளிரவு 1.20 மணிக்குப் புறப்படும் விமானம், பிரான்ஸ் நகரை அந்த ஊரின் நேரப்படி காலை 8.15 மணிக்குச் சென்றடையும்.
பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்ற ஏராளமானவர்கள் புதுச்சேரியில் வசித்துவருகின்றனர். இவர்களும் இவர்களும் உறவினர்கள், நண்பர்களும் அடிக்கடி பிரான்சு நாட்டுக்குச் சென்றுவருவார்கள். பெரும்பாலானவர்கள் பெங்களூருவுக்குச் சென்று அங்கிருந்து பாரிஸ் நகருக்குச் சென்றுவருகின்றனர். இதனால் இருந்துவந்த சிரமம், இந்த புதிய விமான சேவையால் நீங்கியுள்ளது. இதனால் பிரான்சுக்குச் சென்றுவரும் புதுச்சேரி பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுவை மற்றும் தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலா செல்வோரிடையேயும் புதிய விமான சேவை மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.