Chennai Corporation Tax: 30ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் ரூ.5,000 ஊக்கத்தொகை - சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியின் சொத்து வரியை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்திவிட்டால், பயனாளருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் சொத்து வரியை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்திவிட்டால், பயனாளருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி விதிப்பு:
சென்னையில் உள்ள 13.31 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அந்தந்த நிதியாண்டின் முதல் பாதிக்கான வரி ஏப்ரல் 15க்குள்ளும், இரண்டாம் பாதிக்கான வரி அக்டோபர் 15க்குள்ளும் முழுமையாக வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் வரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும். அதேநேரம், வரி செலுத்தாதவர் மீது பெருநகர சென்னை மாநகராட்சி சட்ட பிரிவின்படி நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
நடப்பாண்டில் வரி வசூல்:
நடப்பு நிதியாண்டிற்கான சொத்து வரியை ஏப்ரல் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையிலான காலகட்டத்தில், 4 லட்சத்து 89 ஆயிரத்து 794 சொத்து உரிமையாளர்கள் செலுத்தி அதற்கான ஊக்கத்தொகையை பெற்றுள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளியாகியுள்ள தகவலின்படி, மேற்படி காலத்தில் ரூ.290.62 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்ட திருத்தத்தின்படி 2023-24-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத் தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள்.
எவ்வாறு வரி செலுத்தலாம்?
உரிமையாளர்கள் சொத்துவரியை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் அமைந்துள்ள அரசு இ-சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம். நம்ம சென்னை மற்றும் பேடிஎம் செயலி, சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையாகவும் செலுத்தலாம். எனவே, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்தி ஊக்க தொகையை பெற்றிடுமாறும், சென்னை மாநகரத்துக்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் அபராதம்:
கடந்த நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டதால் இரண்டாம் பாதிக்கான சொத்து வரியை அபராதம் இன்றி சொத்து வரி செலுத்த, ஜனவரி 12ம் தேதி வரை மாநகராட்சி அவகாசம் அளித்தது. ஆனாலும், பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள், மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தினர். இதையடுத்து, தாமதமாக வரி செலுத்தியோருக்கு 2 சதவிகிதம் அபராதமும் விதிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு அறிவுரை:
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகராட்சியில் நிர்வாக ரீதியாக 15 மண்டலங்களும், 200 வார்டுகளும் உள்ளன. இங்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஆதாரமாக பொதுமக்களிடமிருந்து சொத்து மற்றும் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. எனவே, வசிக்கும் கட்டடத்தின் குடியிருப்புத் தன்மை மற்றும் உபயோகத் தன்மை ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் செய்தால், வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.