மனைவியை கொலை செய்து , Facebook - ல் Live செய்த கணவர்
மனைவியை கத்தியால் குத்திக் கொன்று , சமூக வலைதளமான பேஸ் புக்கில் நேரலையில் அறிவித்து விட்டு போலீசில் சரணடைந்த கணவர்

கணவன் - மனைவி இடையே தகராறு
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள புனலுார் அருகே கூத்த நாடியைச் சேர்ந்தவர் ஐசக் ( வயது 42 ) இவருக்கு ஷாலினி ( வயது 39 ) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். வெளிநாடுகளில் பணியாற்றிய பின், சமீபத்தில் கேரளா திரும்பிய ஐசக் , உள்ளூரில் ரப்பர் தொழிலாளியாக உள்ளார். வீட்டின் அருகே உள்ள பள்ளியில் ஷாலினி உதவியாளராக வேலை செய்து வந்தார். ஐசக் தொடர்ந்து வேலைக்கு செல்லாததால் , கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அடிக்கடி தன் தாய் வீட்டுக்கு செல்வதை ஷாலினி வழக்கமாக வைத்துள்ளார்.
குளிக்க சென்ற போது கத்தியால் குத்திய கணவர்
சமீபத்தில் தாய் வீட்டுக்கு சென்ற அவரை சமாதானம் செய்து ஐசக் வீட்டிற்கு அழைத்து வந்தார். மாடியில் தனியாக தங்கியிருந்த ஷாலினி வீட்டில் குளிக்க சென்றபோது , பின்தொடர்ந்து சென்ற ஐசக் , மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், முகம் , கழுத்து , முதுகு உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த ஷாலினி , சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.
கொலை செய்து விட்டு Facebook - க்களில் நேரலை
பேஸ்புக் பக்க நேரலையில் வந்த ஐசக் , மனைவியை கொன்று விட்டதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான இரண்டு நிமிட வீடியோவில் மனைவி குறித்து சரமாரியாக அவர் புகார் தெரிவித்திருந்தார். வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்து சொந்தமாக இரு சக்கர வாகனம் வாங்கியதாகவும் , குடும்பம் குறித்து கவலைப்படாமல் வெளியே சுற்றியதாகவும் குற்றஞ் சாட்டியிருந்தார்.
அதனால் அவரை கொன்றதாக கூறிய ஐசக் , பின் புனலுார் போலீசாரிடம் சரணடைந்தார். அவரின் 19 வயது மகன் அளித்த புகாரைத் தொடர்ந்து , கொலை உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஐசக்கை கைது செய்தனர். கணவன் மனைவி இருவரின் போன்களை மொபைல் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





















