சென்னை : திருநங்கைகளுக்காக தொடங்கப்பட்டது பயிற்சி வகுப்புகளுடனான தங்குமிடம்..!
சென்னையில் திருநங்கைகளுக்காக பெரியார் நகரில் இல்லம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இல்லத்தில் திருநங்கைகளுக்கு டெய்லரிங் பயிற்சி, அழகுக்கலை பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மூன்றாம் பாலினத்தவர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாநில அரசுகளும் மூன்றாம் பாலினத்தவர்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னை, பெரியார் நகரில் அமைந்துள்ள கார்த்திகேயன் சாலையில் திருநங்கைகளுக்கான தங்குமிடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இங்கு செயல்படும் இந்த காப்பகத்தில் திருநம்பிகளும், திருநங்கைகளும் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 25 நபர்கள் வரை இந்த இடத்தில் வசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தங்குமிடம் மத்திய அரசின் சமூக நீதித்துறையின் கீழ் கரிமா கிரே என்ற திட்டத்தின் கீழ் திருநங்கைகள் உரிமைகள் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். திருநங்கைகளுக்கான இந்த இல்லம் குறித்து கருத்து தெரிவித்த தேசிய சமூக பாதுகாப்பு நிறுவன துணை ஆணையர் கிரிராஜ் கூறும்போது, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் திறக்கப்பட்ட 13 இல்லங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த இல்லத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் ஏராளமான இல்லங்கள் தொடங்கப்படும் என்றார்.
இந்த இல்லங்களில் திருநங்கைகளுக்கு ஒரு ஆண்டு வரை தங்க அனுமதிக்கப்படும். இந்த ஒரு ஆண்டு காலத்தில் அவர்களுக்கு டெய்லரிங், பைகள் தயாரிப்பு, அழகுகலை பயிற்சி, பாதுகாவலர்கள் பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு எந்த பயிற்சியில் சேர விருப்பமோ அந்த பயிற்சி அளிக்கப்படும். தற்போது சில நிறுவனங்கள் திருநங்கைகளை பணியில் அமர்த்த முன் வந்துள்ளனர். இந்த இல்லத்தில் திருநங்கைகளுக்கு யோகா செய்வதற்கு என்று தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இல்லங்களில் அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது.