மேலும் அறிய
தாம்பரம் டூ செங்கல்பட்டு, 100 கி.மீ வேகம்.. கூடுதல் ரயில்களால் பயணிகள் மகிழ்ச்சி!
தெற்கு ரயில்வே சார்பில், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான மூன்றாவது ரயில் பாதையின் வேகம் 80 கிமீ இருந்து 100 கிமீ வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மின்சார ரயில்
சென்னை மின்சார ரயில்களை எடுத்துக் கொண்டால், சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கம் முக்கிய ரயில் போக்குவரத்து தடமாக உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சென்னை புறநகர் பகுதியில் இருந்து , பள்ளி கல்லூரிகள் செல்பவர்கள், தங்கள் பணிக்காக சென்னைக்கு வேலைக்கு செல்பவர்கள் ஆகியோர் வந்து செல்வதற்கு, பிரதான வழித்தடமாக இது இருந்து வருகிறது. ஆனால் போதிய வழித்தடங்கள் இல்லாத காரணத்தினால், பெரும்பாலான ரயில்கள் செங்கல்பட்டு வரை இயக்கப்படாமல், தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 250 முதல் 270 ரயில்கள் வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

புறநகர் பகுதி வளர்ச்சி
சென்னையின் புறநகர் பகுதிக்கான, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்குளத்தூர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இப்பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பணிக்காக சென்னையை நோக்கி தினமும் படையெடுக்கின்றனர். ஆனால் அவர்களுக்காக போதிய அளவில் தொடர்வண்டிகள் இயக்கப்படவில்லை என்பது தொடர் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இவர்கள் வசதிக்காக, கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்களை செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும் என, பயணியர் தரப்பில் கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

மூன்றாவது பாதை
தாம்பரம் -- செங்கல்பட்டு வரை இரண்டு பாதை மட்டுமே இருந்து வந்தது. கூடுதல் ரயில்களை இயக்குவதற்காக செங்கல்பட்டு தாம்பரம் இடையே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு மூன்றாவது பாதை அமைக்கப்பட்டது. சுமார் 598 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த பாதையானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. மூன்றாவது பாதையை அமைக்கப்பட்டும், வழிமுறைகளின் படி படிப்படியாக வேகம் அதிகரிக்கும் முயற்சியும் நடைபெற்று வந்தது.
100 கிலோமீட்டர் வேகம்
மூன்றாவது பாதை அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பொழுது 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு ரயில்கள் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டது. பின்னர் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி வேகம் அதிகரிக்கப்பட்டு 80 கிலோமீட்டர் அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் வேகம் 100 கிலோமீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கூடுதல் ரயில்கள்
இதனை அடுத்து செங்கல்பட்டு- கடற்கரை இடையே காலை நேரத்தில் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தெற்கு ரயில்வே ரயில்வே பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மூன்றாவது பாதையில் விரைவு ரயில்கள் இயக்கும் போது, மற்ற இரண்டு பாதைகளில் கூடுதலாக சென்னை புறநகர் மின்சார ரயில்களை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், செங்கல்பட்டு முதல் தாம்பரம் இடையே மேலும் ,3 முதல் 4 ரயில்களை காலை 7 மணி முதல் 9 மணி வரை இயக்கம் பட்சத்தில் புறநகர் பகுதிகளில் இருக்கும் கூட்டம் நெரிசலை குறைக்கலாம். அதே போல மாலை வேலைகளிலும் கூடுதல் ரயில்களை இயக்கும் பட்சத்தில் பயணிகளுக்கு இது பெரும் நிம்மதியை தரும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். கூடுதல் ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ரயில்வே அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். விரைவில் தாம்பரம் செங்கல்பட்டு இடையே கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ரயில்கள் இயக்குவது பொதுமக்களுக்கு நிம்மதியே..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















