மீண்டும் இயங்க தொடங்கிய அரசு பேருந்துகள்.. போராட்டத்தை வாபஸ் பெற்ற ஊழியர்கள்..!
போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் உடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து சென்னையில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் இயங்க தொடங்கியது.
சென்னையில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார்மய நடவடிக்கையை கண்டித்து சென்னையில் குறைந்த அளவு அரசு பேருந்துகளை இயக்கி போராட்டம் நடத்தி வருகின்றன. சைதாப்பேட்டை, கே.கே.நகர், வடபழனி, ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனைகளை சேர்ந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், “ மக்கள் அவதிப்பட கூடாது என்பதுதான் திமுக அரசின் எண்ணம். அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை அறிந்து ஐப்பானில் இருந்து முதலமைச்சர் முக ஸ்டாலின், எங்களை தொடர்பு கொண்டு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். போராட்டம் நடத்தும் தொழிற்சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். அவர்களும் விரைவில் பேருந்துகளை இயக்குவதாக ஒப்புதல் அளித்து இருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து முதலமைச்சர் வந்தவுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சரி செய்வோம்.
என்ன பிரச்சினை..?
போராடும் ஊழியர்களின் கோரிக்கை என்னவென்றால் அரசு பேருந்துகளில் தனியார் ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்த கூடாது என்பதுதான். நமக்கு பொதுமக்கள் பிரச்சினையை போக்குவதற்குகாக இந்த முடிவை தமிழ்நாடு அரசு எடுத்தது. கடந்த ஆட்சி காலத்தில் போதுமான அளவிலான ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நடத்தப்படவில்லை. அதற்கான பணிகள் தற்போதைய ஆட்சியில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த பணியில் ஈடுபட குறைந்தது 3 முதல் 4 மாதங்கள் வரை காலம் பிடிக்கும். அதை சரிசெய்யவே தனியார் ஒப்பந்த ஊழியர்களை தற்காலிகமாக பணியமர்த்த முடிவு செய்தோம். இதுகுறித்து ஊதிய ஒப்பந்ததின்போதே தெரிவித்தோம். இன்று வரை அவர்கள் அதை சரி ஏற்றுகொள்ளவில்லை.
பேருந்துகள் இயங்கத் தொடங்கின
போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் உடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து சென்னையில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் இயங்க தொடங்கியது. 10 நிமிடங்களில் அனைத்து பகுதிகளிலும் வழக்கமான பேருந்து சேவை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.