கலவரத்தால் ரத்தான விமானங்கள்! சென்னை விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்த வயதான தம்பதி!
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சொந்த ஊர் செல்ல முடியாமல் வயதான தம்பதியினர் சென்னையில் தவிப்பு
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக, சென்னையில் இருந்து வங்கதேசம் செல்லும் 3 விமானங்கள்,2 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், வங்கதேசத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் உள்ள தனது 61 வயது மனைவியுடன், சொந்த ஊர் திரும்ப வழியில்லாமல், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், உயிருக்கு போராடும் மனைவியுடன் தவித்துக் கொண்டு இருக்கின்றார்.
வங்கதேசம் - வேலூரில் சிகிச்சை...
வங்கதேசத்தைச் சேர்ந்தவர் சுசில் ரஞ்சன் (73). இவரது மனைவி புரோவா ராணி (61). இந்த நிலையில் புரோவா ராணி புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு வங்கதேசம் மருத்துவமனைகளில் செய்யளித்தும் குணமடையவில்லை. இதனை அடுத்து சுசில் ரஞ்சன், தனது மனைவியை மருத்துவ சிகிச்சைக்காக, இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமானத்தில், சென்னைக்கு அழைத்து வந்தார். அதன் பின்பு தமிழ்நாட்டில் வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் மனைவிக்கு சிகிச்சை பெற்றார்.
விமானங்கள் ரத்து...
ஆனாலும் மனைவி முழுமையாக குணமடையவில்லை. இந்த நிலையில் தனது மனைவியுடன் சொந்த நாடான வங்கதேசத்திற்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி திங்கள் கிழமை பகல் 2 மணி அளவில் சென்னையில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்கா செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மனைவியுடன் பயணம் செய்வதற்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து இருந்தார்.
இதை அடுத்து அந்த விமானத்தில் வங்கதேசம் செல்வதற்காக நேற்று திங்கள் கிழமை, காலை மனைவியுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் வங்கதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக, இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து டாக்கா சொல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதை அடுத்து இந்தக் கணவன் மனைவி இருவரும் சொந்த ஊர் செல்ல முடியாமல், சென்னை விமான நிலைய போர்டிகோ பகுதியில் தங்கியிருந்தனர்.
தொடரும் விமான சேவை ரத்து...
நேற்று மதியம் 2 மணி விமானத்தில் பயணம் செய்ய இண்டிகோ ஏர்லைன்ஸ் கவுன்டர் சென்றபோது, விமானம் ரத்து என்று அறிவித்தனர். இதை அடுத்து இந்த வங்கதேச மூத்த குடிமக்களான தம்பதியினர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். அதோடு அவருடைய மனைவி மிகவும் நோய் வாய்ப்பட்டு, ஆபத்தான நிலையில் இருக்கிறார். உள்நாட்டு கலவரம் காரணமாக, சென்னை வந்த தம்பதியினர் சென்னை விமான நிலையத்திலேயே சுற்றி திரிவது, அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. கலவரம் முடிந்து விமான சேவை மீண்டும் தொடங்கும் வரை இவர்களைப் பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை எழுந்துள்ளது.
இது சம்பந்தமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகளை கேட்ட போது, வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலை காரணமாக, விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் எங்களால் எதுவும் செய்வதற்கு இல்லை என்று கூறுகின்றனர்.
சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, இது குறித்து அந்த நாட்டு தூதரக அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனாலும் நாங்கள் மனிதாபிமானம் கருதி, சேவை அமைப்புகள் மூலமாக, அவர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்று கூறுகின்றனர்.