எலும்பும் தோலுமான படங்கள்; ஐஐடி மெட்ராஸில் உணவு தரப்படாமல் நாய்கள் சித்ரவதை செய்யப்படுகிறதா?
சென்னை ஐஐடி நிர்வாகம் நாய்களை அடைத்து வைத்து உணவிடாமல் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. அந்த நாய்கள் இளைத்து போய் எலும்பும் சதையுமாக கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஐ.ஐ.டி மெட்ராஸ் 1959 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இந்த இன்ஸ்டிடியூட் பதினாறு துறைகளை சேர்ந்த பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. இது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் "சிறந்த கல்வி நிறுவனம்" (Best Educational Institution) என்றும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல சர்ச்சைக்குரிய இடமாகவே சென்னை ஐஐடி இருந்து வந்துள்ளது. ஜாதிய ஒடுக்குமுறைகள் ஐஐடி கேம்பஸ்ஸுக்குள் கடுமையாக கடைபிடிக்கப்படுவதாக பல செய்திகளை பார்த்துள்ளோம். முனைவர் கணித மேதை வசந்தா கந்தசாமி துவங்கி விபின் வரை பல சர்ச்சைகளை உள்ளடக்கி இருக்கும் ஐஐடி நாய்களை அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்ததாக புகார்கள் வந்துள்ளன. மிகவும் மோசமான நிலையில் 3 நாய்கள் ராஜா அண்ணாமலை புறத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. நாய்கள் குறித்து அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகி உள்ளன. ஐஐடி மெட்ராஸ் கேம்பஸ்ஸுக்குள் திரியும் நாய்களை நிர்வாகம் பிடித்து கூண்டில் அடைத்து வைத்து உணவேதும் கொடுக்காமல் சித்ரவதை செய்து வந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
அந்த நாய்கள் உடல் இளைத்துப் போய் எலும்பும் தோலுமாக உயிருக்கு போராடி கிடந்துள்ளன. நாய்களை பரிசோதித்த மருத்துவர்களின் ஆரம்ப அறிக்கையில், நாய்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன என அறிவிக்கப்பட்டு உள்ளது. அவை இரத்த சோகை மற்றும் முக்கிய உறுப்புகள் அபாயகரமான நிலையில் உள்ளன எனக் கூறப்பட்டு உள்ளது. சாப்பிடுவதற்கு உணவு வழங்கிய போது அதை சாப்பிட இரண்டு நாய்கள் மறுத்துவிட்டன. மிகவும் வற்புறுத்தலுக்குப் பிறகு இறுதியாக இரண்டு நாய்களும் அந்த ஒரு பகுதியை மட்டுமே சாப்பிட்டன. 3 நாய்களில், 2 தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளன. அந்த நாய்களின் மீட்பு குறித்து குறைந்தது 24 மணிநேரத்திரு பிறகு தான் கூறமுடியும் என மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த 3 நாய்கள் PFA என்ற என்ஜிஓவால் தத்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த வாரம், ஐஐடி-மெட்ராஸ் வளாகத்தில் அமைந்துள்ள நாய்கள் காப்பகத்தில் கடந்த ஓராண்டில் பல தெருநாய்கள் இறந்துவிட்டதாகத் தகவல் வெளியானதையடுத்து. கேபி ஹரிஷ் என்ற பெங்களூரை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த ஐஐடி வளாகத்தில் டாக் பார்க் என்ற பகுதி உள்ளது. இது மோசமான நிலையில் இருந்துள்ளது. சென்னையில் இருந்த 186 தெரு நாய்களை முறையின்றி, விதியை மீறி இவர்கள் பிடித்துள்ளனர். அதை இந்த டாக் பார்க்கில் அடைத்து வைத்துள்ளனர். கழுத்தில் செயின் போட்டு, உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
24 மணிநேரமும் செயினில், கூண்டுக்குள் அந்த நாய்கள் இருந்துள்ளன. நாய்களை பராமரிக்க ஆட்கள் இல்லை. இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அந்த நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பார்த்துக்கொள்ள ஆட்கள் இல்லாமல் அந்த நாய்கள் கடுமையாக கஷ்டப்பட்டுள்ளன. இதில் 45 நாய்கள் பலியானது. மீதம் உள்ள 141 நாய்கள் மிக மோசமான உடல்நிலையில் இருக்கின்றன. இந்த நாய்களின் மரணம் குறித்து ஐஐடி ரிஜிஸ்டரும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நாய்களை விதிகளை மீறி சிறைபிடித்து கொடுமைப்படுத்திய காரணத்தால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாய்களின் மரணம் தொடர்பாக சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளே இருக்கும் நாய்களை விடுவிக்காமல் இன்னும் அடைத்து வைத்துள்ளனர்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Tamil Nadu Health Minister Ma Subramanian) ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த வளாகத்துக்குச் சென்று பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , "ஐஐடி வளாகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 56 தெருநாய்கள் இறந்துள்ளன. அக்டோபர் 2020 தரவுகளின்படி காப்பகத்தில் 188 நாய்கள் இருந்தன. அந்த நாய்களை கண்காணிக்க ஐஐடி நிர்வாகம் (IIT management) ஒரு குழுவை அமைத்தது. நாய்களைப் பராமரிக்க முழுநேர பணியாளர்களாக ஒன்பது பேர் நியமிக்கப்பட்டனர். மேலும் பேசிய அவர், 29 நாய்கள் தத்தெடுக்கப்பட்டதாகவும், 14 நாய்கள் ஆக்ரோஷமாக இல்லாததால் வெளியே விடப்பட்டதாகவும், இரண்டு நாய்கள் தப்பிவிட்டதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மீதமுள்ள 87 நாய்களை இன்ஸ்டிட்யூட் நிர்வாகம் பராமரித்து வருகிறது" என்றார்.
கடந்த செப்டம்பர் 17-ம் தேதியே தெரு நாய்களை டாக் பார்க்கில் வைக்க கூடாது என்று சென்னைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஐஐடி நிர்வாகம் இதை பின்பற்றவில்லை. பல நாய்கள் இன்னும் உள்ளே இருக்கின்றன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி உள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேபி ஹரிஷ் கொடுத்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விபரங்கள் அறிந்துகொள்ள ஐஐடி மெட்ராஸை தொடர்புகொண்டால், "எதுவாக இருந்தாலும் மெயில் செய்யுங்கள்" என்று பதில் தரப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் தங்கள் வளாகத்தில் சுற்றித் திரிந்த நாய்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து சரியாக உணவு கொடுக்காமல் வதைப்பதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.