தீபாவளி ஸ்பெஷல் ; சொந்த ஊருக்குப் போக ரெடியா ? அமைச்சர் சிவசங்கர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்
தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த முக்கிய அறிவிப்பை காணலாம்.

தீபாவளி பண்டிகை - ஆலோசனை கூட்டம்
2025 ஆம் ஆண்டு வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு , போக்குவரத்து துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அரசு முதன்மை செயலாளர் , போக்குவரத்து துறை ஆணையர் , காவல்துறை உயர் அலுவலர்கள் , அரசுத் துறை அலுவலர்கள், தனி அலுவலர்கள், போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
பின்பு செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர் பேசுகையில் ;
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக மொத்தம் 20 ஆயிரத்து 378 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன,
வரும் 16 - ம் தேதியிலிருந்து 19 - ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்பு பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும் , பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட நாட்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 20 ஆயிரத்து 378 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 21 - ம் தேதி முதல் 23 - ம் தேதி வரை தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 4,253 சிறப்பு பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,600 என மொத்தம் 15,129 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
எங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன ?
தீபாவளிக்கு இயக்கப்படும் பேருந்துகள் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் , கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் கோயம்பேடு , மாதவரம் புதிய பேருந்து நிலையம் என்ன மூன்று இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ;
1. புதுச்சேரி
2. கடலூர்
3. சிதம்பரம்
4. திருச்சி
5. மதுரை
6. தூத்துக்குடி
7. செங்கோட்டை
8. திருநெல்வேலி
9. சேலம்
10.கோயம்புத்தூர்
11. கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
12. வந்தவாசி போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ;
1. கிழக்கு கடற்கரை
2. காஞ்சிபுரம்
3. வேலூர்
4. பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ;
1. பொன்னேரி
2. ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
3. திருச்சி
4. சேலம்
5. கும்பகோணம்
6. திருவண்ணாமலை
குறிப்பாக கார் மற்றும் இதர வாகனங்கள் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு , தாம்பரம் பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து பழைய மாமல்லபுரம் சாலை , கேளம்பாக்கம் , திருப்போரூர் , செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிசுற்று சாலை கேளம்பாக்கம் திருப்போரூர் , செங்கல்பட்டு சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிக்கெட் - முன்பதிவு மையங்கள்
மொத்தம் 12 இடத்தில் முன்பதிவு மையங்கள் செயல்படும். கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 10 மையங்கள்.
கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் 2 மையங்கள் என மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் செயல்படும்.
மேலும் முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணைய தளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைகள் திறந்து இருக்கும் என்றும் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக 9445014436 என்ற தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல்
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் புகார்களுக்காக 1800 425 6151 மற்றும் 044 - 24749002 , 044 - 26280445 , 044 - 26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
24 மணி நேரமும் செயல்படும் இணைப்பு பேருந்துகள்
பொது மக்களின் வசதிக்காக கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் செல்ல மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 150 இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரம் செயல்படும்.
கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பாக ரயில்வே துறையில் பேசப்பட்டுள்ளது. வெளியூருக்கு செல்ல பயணிகள் இதுவரை இரண்டு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து சென்ற வருடம் இயக்கினோம். அது வெற்றிகரமாக நடைபெற்றது. ஆயுத பூஜைக்கு 300 பேருந்துகள் இயக்கப்பட்டது. அதுவும் குறைந்த பயண நேரம் உள்ள ஊர்களுக்கு தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுத்து இயக்கப்படும்.
ஆம்னி பேருந்துகளில் அனைத்து நேரமும் அதிக கட்டணம் வசூலிப்பது கிடையாது. ஒரு சில நேரங்களில் தான் அவ்வாறு வசூல் செய்கிறார்கள்.அதுவும் ஒரு சில பேர் தான் அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பேருந்துகள் பழுதானால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அந்தந்த கழகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம் , மேலும் ரோந்து வாகனங்கள் மூலம் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளோம்
புறநகர் ரயில்களும் கூடுதலாக இயக்க அவர்களிடம் பேசியுள்ளோம், வழியில் செல்லும்போது அனுமதி இல்லாத உணவகங்களில் நிறுத்தினால் அதனை கண்டுபிடித்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
பட்டாசு அனுமதி இல்லை
சிறப்பு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு அவ்வாறு எல்லாம் கிடையாது அவ்வாறு வசூலித்தால் சொல்லுங்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பதில் அளித்தார் மேலும் பேருந்துகளில் பட்டாசுகளை கண்டிப்பாக எடுத்துச் செல்லக் கூடாது என அமைச்சர் தெரிவித்தார்.





















