டிட்வா புயல் ; ரெட் அலர்ட் எச்சரிக்கை !! சென்னை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
டிட்வா புயல் எதிரொலி - இன்று தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்த வானிலை மையம்

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை கடற்பகுதியில் நிலவிய டிட்வா புயலின் நிலை மற்றும் அதன் தாக்கம் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் பேசியதாவது ;
" டிட்வா புயல் " தற்போது தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில், வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும் , காரைக்காலிலிருந்து தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு - தென்கிழக்கே 250 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 350 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ( 30-ஆம் தேதி ) அதிகாலை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், வடதமிழகம் - புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக் கூடும்.
5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
“டிட்வா புயல் " வடக்கு - வடமேற்கு திசையில் நகரும் பொழுது வடதமிழகம் புதுவை கடலோரப் பகுதிகளிலிருந்து, இன்று நள்ளிரவில் 60 கி.மீ தொலைவிலும் நாளை (30-11-2025) அதிகாலை 50 கி.மீ. தொலைவிலும், மாலை 25 கி.மீ தொலைவிலும் நிலவக் கூடும். இன்று நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது.
13 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராபள்ளி, தஞ்சாவூர் திருவாருர், புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை ( 30.11.25 ) திருவள்ளூர், ராணிப்பேட்டை , சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி ஆகிய 9 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 29 - 30 தேதிகளில் வங்க கடல் பகுதிகளில் 70 முதல் 80 கிமீ வேகத்திலும், இடையிடையே 90 கிமீ வேகத்திலும் காற்று வீசக் கூடும். வரும் 1 ஆம் தேதி முதல் மழை பாதிப்பு படிப்படியாக குறையக் கூடும்.
கன மழை எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகவும் குறிப்பாக கடலோர தமிழகத்தில் மிகத் தீவிரமாகவும் இருந்தது. தமிழகத்தில் அநேக இடங்களில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
சென்னை பொறுத்தவரை இன்றும் நாளையும் கன மழை முதல் , மிக கன மழை பெய்ய கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடியகரையில் 25 சென்டிமீட்டரும், வேதாரண்யத்தில் 19 செ.மி, வேளாங்கண்ணியில் 13 சென்டிமீட்டரும், திருப்பூண்டி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இயல்பைவிட 3 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளது. புயல் கரை கடக்க வாய்ப்பு இல்லை. கடலிலேயே நிலவும் வாய்ப்பு தான் உள்ளது. இன்று எண்ணூர் துறைமுகத்தில் 40 கிமீ வேகத்திலும், பாம்பன் 60 கிமீ வேகத்திலும் காற்று அளவு பதிவாகி உள்ளது. நாகப்பட்டினம் , காரைக்கால் ஆகிய இரு துறைமுகங்களில் D5 புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மாலை முதல் விட்டு விட்டு கனமழை பொழிவதற்கான வாய்ப்பு உள்ளது.






















