Budget : பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.. மீண்டும் தாக்கல் செய்யப்படும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. மீண்டும் இன்று ஆன்லை சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தின்போது பல துறை ரீதியாக பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும்.
தமிழக சட்டசபையின் பொது பட்ஜெட் கடந்த 20-ஆம் தேதி நிதி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் தாக்கலில் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000, சோழர் அருங்காட்சியகம் என பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதனை தொடர்ந்து 21-ஆம் தேதி வேளாண் துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யபப்ட்டது. அதில் விவசாயிகள் நலனுக்காக பல்வேறு அம்சங்கள் அறிவிக்கப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பட்ஜெட்டின் போது கரும்பு டன்னுக்கு கூடுதலாக ரூ 195 வழங்கப்படும், சிறந்த அங்கக விவசாயிகு நம்மாழ்வார் விருது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார். மக்களிடையே இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்கதாகவே இருக்கிறது.
நேற்று தெலுங்கு வருட பிறப்பு என்பதால் சட்டசபை நடைபெறவில்லை. இன்று மீண்டும் தொடங்குகிறது. இன்று காலை சட்டசபையில் முதன்மையாக சபாநாயகர் இரங்கல் தீர்மானம் வாசிப்பார் அதாவது முன்னாள் உறுப்பிணர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்படும். பின் சட்டசபை நிகழ்வுகள் தொடங்கும்.
இன்று சட்டசபை தொடங்கியதும் கேள்வி நேரம் இல்லாமல் நேரமில்லா நேரம் நடத்தப்படும். அதில் மக்களை சார்ந்த முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும். குறிப்பாக, ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் அதற்கான தடை மசோதா நிறைவேற்றப்படும்.
ஆன்லைன் சூதாட்ட மசோதாவை திருப்பி அனுப்பியதும் 9ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது இந்த மசோதா மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட்து. அதன்படி இன்று சட்டசபையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்வார். எதிர்கட்சி தலைவர்களும் இந்த தடை மசோதா குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
நேரமில்லா நேரத்தை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும். இதில் ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் பட்ஜெட் மிதான விவாதத்தில் பங்கேற்று விவாதிப்பார்கள். இந்த பட்ஜெட் மீதான விவாதம் நாளையும் தொடரும். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் மீண்டும் திங்கள்கிழமை விவாதம் நடைபெறும்.
28ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். பட்ஜெட் மீதான விவாதத்தை தொடர்ந்து மானியகோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். 29-ந்தேதி முதல் மானியக்கோரிக்கையாக நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை காலையில் நடைபெறும், அதனை தொடர்ந்து போக்குவரத்து துறை மாலையிலும் நடைபெறும்.
இன்று முக்கியமாக ஆன்லைன் சூதாட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த முறை ஆன்லைன் சூதாட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த முறையும் அதே போல் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.