சென்னையில் புறநகர் ரயில் சேவையை நாளையே தொடங்க நடவடிக்கை - தெற்கு ரயில்வே தகவல்
சென்னையில் புறநகர் ரயில் சேவையை நாளையே தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் நேற்று முடங்கிப்போனது. இன்று காலை முதல் வழக்கம்போல வெயில் அடித்தாலும் சென்னை புறநகர் பகுதிகள், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், வட சென்னையின் முக்கிய பகுதிகள், வேளச்சேரி, மடிப்பாக்கம் என சென்னையின் பல பகுதிகளிலும் மழைநீர் இதுவரை வடியவில்லை.
புறநகர் ரயில்சேவை:
இந்த பகுதிகள் மட்டுமின்றி சென்னையில் உள்ள ரயில்வே வழித்தடங்களிலும் மழைநீர் இடுப்பளவு தேங்கியது. பல ரயில் நிலையங்களில் ப்ளாட்பாரம் உயரத்திற்கு மழைநீர் தேங்கியிருக்கிறது. இதன் காரணமாக, மின்சார ரயில்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் புறநகர் ரயில் சேவை நேற்று முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இன்றும் புறநகர் ரயில் சேவை இன்றும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், தண்டவாளங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ரயில்வே பணியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவையை முழுவீச்சில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாளை இயக்க நடவடிக்கை:
இதனால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வரையிலான வழித்தடத்தில் ரயில்கள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையின் முக்கிய பகுதிகள் பலவற்றிலும் மழைநீர் வடிந்தாலும், சில பகுதிகளில் இதுவரை மழைநீர் வடியாததால் ஏற்கனவே மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் மாற்றுப்பாதைகளில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு வருகின்றன. பொதுவாகவே, புறநகர் பகுதியில் இருந்து சென்னைக்கு வருபவர்களின் பெரும்பாலான தேர்வாக மின்சார ரயில் உள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து:
மிக்ஜாம் புயல் காரணமாக இன்று மின்சார ரயில் இயக்கப்படாத காரணத்தால், புறநகர் பகுதியில் இருந்து சென்னைக்குள் வேலைக்கு வருபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நாளை மக்களின் வசதிக்காக நாளை புறநகர் ரயில்கள் முழுவீச்சில் இயக்கப்பட தெற்கு ரயில்வே பணியாற்றி வருகிறது. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி குளம்போல இருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூர் செல்லும் சூப்பர் பாஸ்ட் ரயில், காரைக்காலி் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் ரயில், மன்னார்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் மன்னை எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் ரயில், காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.